கங்காம்பிகே பதவி காலம் நிறைவடைவதால் பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவிக்கு 27-ந் தேதி தேர்தல்

கங்காம்பிகே பதவி காலம் நிறைவடைவதால், பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவிக்கு வருகிற 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

Update: 2019-09-13 22:00 GMT
பெங்களூரு, 

கங்காம்பிகே பதவி காலம் நிறைவடைவதால், பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவிக்கு வருகிற 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

பா.ஜனதா கைப்பற்றும்

பெங்களூரு மாநகராட்சி மேயராக இருப்பவர் கங்காம்பிகே. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவரின் பதவி காலம் வருகிற 28-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய மேயரை தேர்ந்தெடுக்க வருகிற 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

பெங்களூரு மாநகராட்சிக்கு அடுத்த ஆண்டு (2020) பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 4 ஆண்டுகள் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தை நடத்தியது. இப்போது கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பா.ஜனதா அரசு வந்துள்ளது. இதனால் பெங்களூரு மாநகராட்சியிலும் பா.ஜனதா அதிகாரத்தை கைப்பற்றும் என்று கூறப்படுகிறது. சுயேச்சை கவுன்சிலர்களின் ஆதரவு பா.ஜனதாவுக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

மேயர் பதவிக்கு போட்டி

198 வார்டுகளை கொண்ட பெங்களூரு மாநகராட்சியில் பா.ஜனதா 100 வார்டுகளிலும், காங்கிரஸ் 76 வார்டுகளிலும், ஜனதா தளம்(எஸ்) 16 வார்டுகளிலும், சுயேச்சைகள் 6 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து, 4 ஆண்டுகள் அதிகாரத்தை நடத்தின. காங்கிரஸ் மேயர் பதவியையும், ஜனதா தளம்(எஸ்) துணை மேயர் பதவியையும் பகிர்ந்து கொண்டன.

பா.ஜனதாவில் மேயர் பதவிக்கு கடும் போட்டி எழுந்துள்ளது. துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா ஆகியோர் தங்களின் ஆதரவாளருக்கு மேயர் பதவியை வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் ஆகியோரிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்