பீளமேட்டில், பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மன் கால்தடம் பதிந்ததாக பரபரப்பு - ஏராளமான பக்தர்கள் திரண்டனர்

பீளமேட்டில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மன் கால்தடம் பதிந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.

Update: 2019-09-13 23:30 GMT
பீளமேடு,

கோவை பீளமேட்டில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் கடந்த 11-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அங்கு 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடந்து வருகிறது. கும்பாபிஷேக தினத்தில் அம்மன் சன்னதி முன்பு ஸ்ரீசக்கர கோலம் போடப்பட்டு இருந்தது. அந்த கோலம் அகற்றப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் பூசாரி செந்தில், அவருடைய மனைவி தேவி, சகோதரி இந்திரா ஆகியோர் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அம்மனுக்கு பூஜை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு யாகம் வளர்ப்பதற்காக வெளியே வந்தனர். 

அப்போது அம்மன் சன்னதி முன்பு போடப்பட்டு இருந்த ஸ்ரீசக்கர கோலத்தில் வித்தியாசமான முறையில் சில கால்தடங்கள் இருந்தன. அதை பார்த்ததும் அவர்கள் வியப்படைந்தனர். உடனே பூசாாி செந்தில் அந்த கோலத்தின் அருகில் சென்று அதை பார்த்தார். அதில் பரவசம் அடைந்த அவர் இது அம்மன் கால்தடம் என்றும் கூறினார்.

இந்த தகவல் அந்தப்பகுதியில் காட்டுத்தீ போன்று பரவியது. இதனால் பீளமேடு, ராமநாதபுரம், சிங்காநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் அந்த கோலத்தில் இருந்த கால்தடங்களை தங்கள் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்பு அவர்கள் அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்துவிட்டு திரும்பினார்கள்.சிலர் அதை தங்கள் செல்போன் மூலம் முகநூல், வாட்ஸ்-அப் உள்பட வலைத் தளத்திலும் பதிவேற்றம் செய்தனர். இந்த கோவில் முன்பு ஏராளமானோர் திரண்டதால் அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அதை போலீசார் சரிசெய்தனர். இந்த சம்பவம் குறித்து கோவில் பூசாரி செந்தில் கூறியதாவது:-

இந்த கோவிலில் பெரிய மாரியம்மன், பத்ரகாளியம்மன், மாகாளியம்மன் ஆகிய 3 சிலைகள் உள்ளன. கடந்த 11-ந் தேதிதான் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் 3 விதமான கால்தடம் உள்ளது. அது பெரிய மாரியம்மன், பத்ரகாளியம்மன், மாகாளியம்மன் ஆகியோரின் கால்தடம் ஆகும்.

கும்பாபிஷேகத்தை ஏற்றுக்கொண்டு 3 தேவியரும் நேரடியாக இறங்கிவந்து, கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். இது பக்தர்களாகிய எங்களுக்கு, மிகவும் பக்தி பரவசத்தை ஊட்டுவது மட்டுமன்றி, இனி நாடு செழிக்கும் என நம்புகிறோம்.

வழக்கமாக கும்பாபிஷேகம் நடத்தும்போது அம்மன் சன்னதி முன்பு கோலம் போட்டு அந்த கோலம் ஒருசில நாட்களுக்குள் அழிக்கப்படும். ஆனால் இந்த கோவிலில் போடப்பட்ட ஸ்ரீசக்கர கோலத்தில் அம்மன் கால்தடம் பதிவாகி இருப்பதால் இங்கு நடந்து வரும் 48 நாட்கள் மண்டல பூஜை முடியும்வரை இந்த கோலத்தை அழிப்பது இல்லை என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்