திருவண்ணாமலையில் சேறும், சகதியுமாக கிடக்கும் தற்காலிக பஸ் நிலையம் ; சிமெண்டு தரை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை காந்திநகரில் சேறும், சகதியுமாக கிடக்கும் தற்காலிக பஸ் நிலையத்தில் சிமெண்டு தரை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-09-13 22:45 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை நகராட்சி திண்டிவனம் சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதனால் விழுப்புரத்தில் இருந்து வரும் பஸ்கள் வேட்டவலம், திண்டிவனம் மற்றும் அவலூர்பேட்டை பைபாஸ் சாலை சந்திப்பு வழியாக பஸ் நிலையத்திற்கு சென்றது.

அதேபோல் திருக்கோவிலூரில் இருந்து வரும் பஸ்கள் எடப்பாளையம் பைபாஸ் சந்திப்பு, மணலூர்பேட்டை சாலை, பழைய அரசு மருத்துவமனை வழியாக பஸ் நிலையத்திற்கு வந்தது. இந்த 2 வழித்தடங்களில் வரும் பள்ளி மாணவர்கள் பைபாஸ் சந்திப்புகளில் இறக்கப்பட்டு வந்தனர்.

இதனால் அவர்கள் அங்கிருந்து நகருக்குள் வர சுமார் 2 கிலோ மீட்டர் தூரமும், மேலும் அவர்கள் பள்ளிகளுக்கு சென்றடைவதில் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கலெக்டர் கந்தசாமி உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விழுப்புரம் மற்றும் திருக்கோவிலூர் மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் மேம்பாலம் கட்டும் பணி நிறைவு பெறும் வரையில் காந்தி நகர் மைதான தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்க உத்தரவிட்டார்.

இதனால் மாணவர்கள், அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திருவண்ணாமலையில் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக காந்தி நகர் மைதான தற்காலிக பஸ் நிலையம் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் சிமெண்டு தரை அல்லது தார் மூலம் தரை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பஸ்கள் சகதி இல்லாத இடத்தில் நிறுத்தப்படுகிறது. மக்கள் பஸ்சில் இருந்து இறங்கும் இடமோ, நடந்து செல்லும் இடமோ சேறும், சகதியுமாக உள்ளது.

பகலில் வெயிலும், மாலையில் மழையும் பெய்யும் போதே இந்த நிலை என்றால் தொடர்ந்து மழை பெய்தால் இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் யாராலும் நிற்க முடியாது. மழை அவ்வப்போது பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இந்த பஸ் நிலையத்தில் பயணிகள் ஒதுங்கி நிழலில் நிற்பதற்கு போதிய நிழற்குடை இல்லை. தற்போது கட்டப்பட்டு வரும் நிழற்குடை பொதுமக்களுக்கு பயனின்றி பஸ் நிற்கும் இடத்தில் கட்டப்படாமல் ஒதுக்குபுறமாக கட்டப்படுகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ரெயில்வே மேம்பாலம் கட்ட இன்னும் 1 வருடத்திற்கு மேல் ஆகும் நிலை உள்ளதால் இந்த பஸ் நிலையத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்