குடிநீர் வழங்கக்கோரி கடலூர் ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை

குடிநீர் வழங்கக்கோரி கடலூர் ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-09-13 22:30 GMT
கடலூர்,

கடலூர் அருகே சி.என்.பாளையம் திடீர்குப்பம் பகுதி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வந்தனர். குடிநீர் தொட்டி இருந்தும் அதை இயக்குவதற்கு ஆட்கள் இல்லை என்றும், அதேபோல் மின் கம்பம் இருந்தும் தெரு விளக்கு இல்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த குறைகளை சரி செய்துதரக் கோரி அப்பகுதி மக்கள் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் குடிநீர், தெரு மின்விளக்கு வசதி கேட்டு பொதுமக்களுடன் சேர்ந்து கடலூர் ஒன்றிய அலுவலகத்தில் காலி குடங்களுடன் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்து இருந்தனர்.

இதன்படி நேற்று காலை அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கிளை துணை செயலாளர் ஆதிமூலம் தலைமையில் கடலூர் ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டனர். தொடர்ந்து அங்கு மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மணிவாசகம், மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட துணை செயலாளர் குளோப், வட்ட செயலாளர் தமிழ்மணி, வட்ட துணை செயலாளர் சுந்தர்ராஜா, கிளை பொருளாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

தொடர்ந்து காலி குடங்களுடன் அனைவரும் ஒன்றிய அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். அப்போது தங்களுக்கு உடனடியாக குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து அவர்களிடம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரன், வீரமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் குடிநீர் வழங்கவும், தெரு மின் விளக்கு அமைத்து தரவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை கேட்ட பொதுமக்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன்பிறகு அப்பகுதி மக்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மின்விளக்கு வசதியும் அமைத்து கொடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்