புதிதாக தொழில் தொடங்க கிராமப்புற மக்களுக்கு அதிகளவில் கடன் வழங்க வேண்டும் ; வங்கியாளர்களுக்கான கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு

புதிதாக தொழில் தொடங்க கிராமப்புற மக்களுக்கு அதிகமாக கடன் வழங்க வேண்டும் என்று நாகர்கோவிலில் நடைபெற்ற வங்கியாளர்கள் கருத்தரங்கில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

Update: 2019-09-13 23:15 GMT
நாகர்கோவில்,

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வங்கியாளர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் நாகர்கோவிலில் உள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். உதவி திட்ட அதிகாரி (மகளிர் திட்டம்) கலைச்செல்வி வரவேற்றார். ஊரக வாழ்வாதார இயக்க கூடுதல் இயக்குனர் செல்வராஜ், மாவட்ட திட்ட இயக்குனர் பிச்சை ஆகியோர் பேசினர்.

முன்னதாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசுகையில் கூறியதாவது:-

கிராமப்புற மக்கள் புதிதாக தொழில் தொடங்கவோ, வியாபாரம் செய்யவோ அல்லது சுய உதவிக்குழுக்கள் தொடங்கவோ திட்டமிட்டு வங்கிகளை அணுகினால் கடனுதவி பெறும் வழிமுறைகளை வங்கிகள் தெளிவாக கூற வேண்டும். அதோடு எந்தெந்த தொழில் தொடங்கினால் சிறப்பாக இருக்கும்? அந்த தொழிலை எப்படி தொடங்குவது? அதுதொடர்பாக யாரை அணுக வேண்டும்? என்றும் வங்கிகள் விளக்கி கூறுதல் அவசியம்.

கிராமப்புறங்கள் பொருளாதாரத்தில் முன்னேறும் போது நகர்புறங்களும் முன்னேறும். எனவே கிராமப்புற மக்களுக்கு அதிக அளவில் கடன்களை வழங்க வேண்டும். வங்கியாளர்கள் தங்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் இடையே நல்லுறவை வளர்த்து வலுவான உயிரோட்டத்துடன் கூடிய மக்கள் அமைப்புகளை உருவாக்க வேண்டும். இதற்கு வங்கியாளர்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் பிரபாகர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராம்குமார் மற்றும் பல்வேறு வங்கிகளை சேர்ந்த மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்