மண்டபம் கடல் பச்சை நிறமானது: மீன்கள் சாவதற்கு காரணம் என்ன ? ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி விளக்கம்

மண்டபம் கடல் பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. இவ்வாறு நிறம் மாறுவதால் மீன்கள் சாவதற்கான காரணம் குறித்து கடல் மீன் ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.

Update: 2019-09-13 23:15 GMT
பனைக்குளம்,

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் குந்துகால் முதல் குருசடை தீவு வரையிலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடல் நீர் பச்சை நிறத்தில் காணப்பட்டது. இதையடுத்து கடலில் உள்ள பல வகை மீன்களும் இறந்து கரை ஒதுங்கிய வண்ணம் இருந்தன.

மேலும் கடலில் உள்ள கண்ணுக்கு தெரியாத ஒரு வகை பாசியானது இனப்பெருக்கத்திற்காக மகரந்த சேர்க்கையை கடல் முழுவதும் பரப்பியதால் இதுபோன்று பச்சை நிறமாக கடல்நீர் மாறியுள்ளதாகவும், தானாகவே சரியாகிவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். அதே நேரத்தில் பாம்பன் குந்துகால் மற்றும் குருசடை தீவு பகுதியில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்தநிலையில் மண்டபம் தென்கடலானது நேற்று அதிக பச்சை நிறத்துடன் காட்சியளித்தது.

குறிப்பாக தெற்கு துறைமுக பகுதியில் பச்சை நிறத்தில் எண்ணெய் போன்றும் கடலில் படர்ந்திருந்தது தெளிவாக தெரிந்தது. நேற்றும் மீன்கள் செத்து மிதந்தன. இதேபோல பாம்பன் ரெயில் பாலம் பகுதியிலும் கடல் நேற்று லேசான பச்சை நிறமாக காட்சியளித்தது.

இதுபற்றி மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி ஜெயக்குமார் கூறியதாவது:-

ஆண்டுதோறும் கடலில் உள்ள ‘நாட்டிலூகா’ என்ற ஒரு வகை கண்ணுக்கு தெரியாத பாசியானது ஜூலை முதல் செப்டம்பர் மாத இடைவெளியில் குறிப்பிட்ட சில நாட்கள் இனப்பெருக்கத்திற்காக கடலில் முழுவதுமாக படர்ந்து விடும். அந்த சமயத்தில் கடலானது முழுமையாக பச்சை நிறமாக மாறி விடும். இதை மீனவர்கள் பூங்கோறை என அழைப்பர்.

கடலில் எவ்வுளவு தூரம் இந்த பாசி படர்ந்திருப்பதாக செயற்கைகோள் மூலம் பார்த்து தகவல் தெரிவிக்குமாறு கொச்சியில் உள்ள கடல்சார் ஆராய்ச்சி நிலையத்தில் கேட்டிருந்தோம். அவர்கள் கொடுத்த தகவலின்படி பாம்பன் முதல் வேதாளை வரையிலான கடல் பகுதியில் இந்த வகை பாசிகள் படர்ந்திருப்பதாகவும், கரையில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இருந்து தான் இந்த பாசி படர்ந்து வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ஆழ்கடல் பகுதியில் இந்த பாசியினால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. கரையோரம் உள்ள பகுதி தான் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாம்பன் ரெயில் பாலத்தை ஒட்டியுள்ள கடலில் லேசாக கடல் பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. மண்டபம் கடலில் தான் பாசி அதிக அளவில் படர்ந்து உள்ளது.

கடந்த 2 நாட்களை விட தற்போது காற்றின் வேகம் அதிகமாகியுள்ளதுடன், கடல் நீரோட்டமும் வேகமாகியுள்ளது. இதனால் இன்னும் ஓரிரு நாளில் கடல் நீரோட்டத்தின் வேகத்தால் பாம்பன் முதல் மண்டபம் வரையிலான கடல் பகுதி முழுவதும் படர்ந்துள்ள இந்த பாசியானது முழுமையாக அழிந்து போய் விடும். இதேபோல 10 வருடங்களுக்கு முன்பு பாம்பன் முதல் மண்டபம் கடல் வரையிலும் பாசி படர்ந்திருந்து. அந்த சமயத்தில் கூட மீன்கள் எதுவும் இறந்து கரை ஒதுங்கியது கிடையாது.

கடந்த 3 நாட்களில் மட்டும் பாம்பன் முதல் வேதாளை வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் சுமார் 5,000 மீன்கள் இறந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த பாசி அதிகமாவதால் கரையை ஒட்டி வாழும் மீன்கள் மட்டுமே சுவாசிக்க முடியாமல் இறந்து கரை ஒதுங்கியுள்ளன.

கடலில் படர்ந்துள்ள இந்த பாசி விஷத்தன்மை கொண்டவை கிடையாது. மீன்களை சுத்தமாக கழுவி வேக வைத்து வழக்கம்போல் சாப்பிடலாம். இன்னும் ஓரிரு நாளில் கடலில் படர்ந்துள்ள பாசியானது இயற்கையாகவே அழிந்து மறைந்து விடும். இதனால் மீனவர்கள் மற்றும் மீன் சாப்பிடுபவர்களும் அச்சப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்