சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை வாலிபருக்கு 5 மாதம் ஜெயில் - ஏற்கனவே சிறைவாசம் முடிந்ததால் விடுவிப்பு

சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை வாலிபருக்கு ராமநாதபுரம் கோர்ட்டு 5 மாதம் சிறை தண்டனை விதித்தது. எனினும் ஏற்கனவே அவர் சிறைவாசம் அனுபவித்ததால் விடுதலை செய்யப்பட்டார்.

Update: 2019-09-13 22:30 GMT
ராமநாதபுரம்,

இலங்கை திரிகோணமலை பகுதியை சேர்ந்த குமரகுருபரன் என்பவரது மகன் மோகனரூபன்(வயது 25). இவர் இலங்கையில் நடைபெற்ற போரின் போது அங்கிருந்து குடும்பத்துடன் தமிழகம் வந்து தங்கியிருந்தார். அதன் பின்னர் இலங்கையில் அமைதி திரும்பியதும் குடும்பத்துடன் இலங்கை சென்ற அவர் மண்டபம் முகாமில் உள்ள பாட்டியை பார்ப்பதற்காக சுற்றுலா விசாவில் கடந்த 2015-ம் ஆண்டு ராமநாதபுரம் வந்துள்ளார். விசா காலம் முடிந்த பின்னரும் சட்ட விரோதமாக தங்கி இருந்து பெயிண்டராக வேலையும் பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் மோகனரூபன் நின்று கொண்டிருந்தார். அப்போது ரோந்து சென்ற பஜார் போலீசார் மோகனரூபனை பிடித்து விசாரித்தனர். அதில், விசா காலம் முடிந்து உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

விசாரணை முடிவில், மோகனரூபனுக்கு 5 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து தண்டனை அறிவிக்கப்பட்ட நாள் வரை சிறையில் இருந்ததால் தண்டனை காலத்தினை அனுபவித்ததாக கருதி அவர் விடுதலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவரை இலங்கைக்கு அனுப்பி வைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் வரை சிறப்பு முகாமில் தங்க வைக்க காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி ராமநாதபுரம் பஜார் போலீசார் மோகனரூபனை திருச்சியில் உள்ள சிறப்பு முகாமிற்கு நேற்று பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்