மதுரை மாவட்டத்தில் காற்றில் பறக்க விடப்படும் ஐகோர்ட்டு உத்தரவுகள்

மதுரை மாவட்டத்தில் ஆபத்தை விளைவிக்கும் பேனர்கள் மற்றும் நகருக்குள் ஆம்னி பஸ்கள் வர தடை ஆகியன குறித்த ஐகோர்ட்டு உத்தரவுகள் தொடர்ந்து காற்றில் பறக்க விடப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2019-09-14 23:30 GMT
மதுரை,

சாலை ஓரங்களில் ஆபத்தை விளைவிக்கும் பேனர்கள் வைக்க ஐகோர்ட்டு தடை விதித்திருந்தது. ஆனால், அதிகாரிகளின் மெத்தனபோக்கால் இந்த உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டது.

இதில் அரசியல் கட்சியினர் வைக்கும் பேனர்களே அதிக அளவு இடம்பெறுகிறது. இதுதவிர, திருமண நிகழ்ச்சிகள், வரவேற்பு மற்றும் பிற நிகழ்ச்சிகள் தொடர்பாக தனியார் பேனர்கள் வைக்கப்படுகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்ற போர்வையில் போலீசார் செய்யும் கெடுபிடிகள் எல்லை மீறி போய் விட்டதாக பொதுமக்கள் குமுறும் நிலை உள்ளது.

ஆனால், இதுபோன்ற ஆபத்தை ஏற்படுத்தும் பேனர்கள் விவகாரத்தில், ஐகோர்ட்டு உத்தரவை கண்டும்,காணாமல் விட்டுவிடுகின்றனர். தற்போது, சென்னையில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து பேனர்களை அகற்றும் விவகாரத்தில் ஒரு சில இடங்களில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தை பொறுத்தமட்டில், நேற்று ஒரு சில இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன. ஆனால், திருமங்கலத்தில் பஸ் நிறுத்தங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், அரசு அலுவலக வளாகம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்படவில்லை.

குறிப்பாக தனியார் திருமண நிகழ்ச்சி நடத்துபவர்கள், திருமங்கலம் பஸ் நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம், ஆனந்தா தியேட்டர் பஸ் நிறுத்தம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் ஆகிய பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பேனர்கள் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஐகோர்ட்டு, அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பின்னரும் திருமங்கலம் நகரில் வைக்கப்பட்டிருந்து பேனர்கள் அகற்றப்படவில்லை.

அதேபோல, மதுரை நகருக்குள் ஆம்னிபஸ்கள் வந்து செல்ல ஐகோர்ட்டு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவு தற்போது வரை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஆம்னி பஸ் மோதி யாராவது உயிரிழந்தால் மட்டுமே இந்த உத்தரவையும் அமல்படுத்துவதில் தீவிரம் காட்டப்படுமா என கருத தோன்றுகிறது.

ஐகோர்ட்டில் தொடர்ந்து ‘குட்டு‘ வாங்கினால்தான் பொதுமக்களின் நலனில் அதிகாரிகள் அக்கறை காட்டுவார்களா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் செய்திகள்