ஈரோடு மாநகராட்சியில் ரூ.155 கோடி திட்டம்: தரை வழி மின்சார வினியோகம் தொடங்கியதால் மின் கம்பிகள் அகற்றம்

ஈரோடு மாநகராட்சியில் ரூ.155 கோடியில் தரைவழி மின்சாரம் வினியோகம் செய்யும் திட்டம் தொடங்கியதால் மின்கம்பங்களில் கட்டப்பட்டு இருந்த கம்பிகள் அகற்றும் பணி நாச்சியப்பா வீதியில் தொடங்கியது.

Update: 2019-09-14 22:00 GMT
ஈரோடு,

ஈரோடு மாநகராட்சியில் தரைவழி மின் இணைப்பு வழங்கும் புதை வட கேபிள்கள் பதிக்கும் பணி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தொடங்கியது. ரூ.155 கோடியில் பழைய ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் வழியாக இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. உயர் அழுத்த மின் புதை வட கம்பிகள் 65 கிலோ மீட்டர் அளவுக்கும், தாழ்வு அழுத்த மின் புதை வட கம்பிகள் 90 கிலோ மீட்டர் அளவுக்கும் புதைக்கப்பட்டு வருகின்றன.

இந்த புதை வட கேபிள்கள் வழியாக குறுக்கு சந்து பகுதிகளில் உள்ள மின் கம்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்படும். இதுபோல் தாழ்வழுத்த கேபிள் புதைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கான மின் இணைப்புகள் அதற்கான தனி இணைப்பு பெட்டிகள் மூலம் வழங்கப்படும். இதற்கான பணிகள் ஈரோடு மின் பகிர்மான வட்ட அதிகாரிகளால் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.

ஒருபுறம் திட்டத்துக்கு கேபிள் அமைக்கும் பணி நடந்து வந்தாலும், ஒரு சில இடங்களில் கேபிள் புதைக்கும் பணி, மின் இணைப்பு கொடுக்கும் பணி ஆகியவை முடிந்து விட்டன. ஈரோடு நாச்சியப்பா வீதியில் உள்ள 400 இணைப்புகள் தரை வழி கேபிள் மின் இணைப்புடன் இணைக்கப்பட்டன. முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் இந்த இணைப்புகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மின் வினியோகம் நடந்து வருகிறது. அதிகாரிகளும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மின் வினியோகம் வழங்கப்பட்ட இணைப்புகள் அனைத்தும் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. எனவே இந்த பகுதியில் உள்ள மின்கம்பிகளை அகற்ற ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து செயற்பொறியாளர் (நகரியம்) ஜி.வி.பழனிவேலு தலைமையில் உதவி செயற்பொறியாளர் ஆர்.கே.குமார், இளமின் பொறியாளர் ஆர்.பிரேமலதா மற்றும் மின்வாரிய ஊழியர்கள் நேற்று மின் கம்பிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபம் முதல் நாச்சியப்பா வீதியில் உயர் அழுத்த மின் கம்பிகள், தாழ்வு அழுத்த மின் கம்பிகள் முழுமையாக அகற்றப்பட்டன. மின் கம்பிகள் அகற்றும்போது பிடிமானம் இல்லாமல் ஒரு கம்பம் திடீரென்று சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக மின்ஊழியர்கள் அந்த கம்பத்தை அகற்றினார்கள்.

மின் கம்பிகள் அகற்றப்பட்ட கம்பங்களில் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு இருப்பதால் அந்த கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளன. ஈரோடு மாநகராட்சியில் கம்பங்கள் அகற்றப்பட வேண்டிய இடங்களில் தெருவிளக்குகள் பொருத்த மாநகராட்சி நிர்வாகம் மூலம் சுமார் 2 ஆயிரத்து 500 கம்பங்கள் நடப்பட உள்ளன.

இந்த கம்பங்கள் கொண்டு வரப்பட்டு சாலையோரங்களில் நட்டு மின் விளக்குகள் பொருத்தப்பட்டதும், மின்சார கம்பங்கள் அகற்றப்படும். இதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்