திருப்பரங்குன்றம் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மோதியதில் கார், 2 ஆட்டோக்கள் சேதம்; குடிபோதையில் ஓட்டியவரிடம் விசாரணை

திருப்பரங்குன்றம் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மோதியதில் 2 ஆட்டோக்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன.

Update: 2019-09-14 21:30 GMT
திருப்பரங்குன்றம்,

மதுரையை சேர்ந்தவர் முருகேசன்(வயது 35), லாரி டிரைவர். இவர் நேற்று பணிகளை முடித்துவிட்டு தனது லாரியை திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரி மொட்டமலையில் நிறுத்தினார். பின்னர் அவர் அதே பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். இதற்கிடையே லாரி நின்றிருந்த இடத்திற்கு மர்மநபர் ஒருவர் வந்தார். அவர் டிரைவர் முருகேசனுக்கு தெரியாமல் அவரது லாரியை எடுத்து ஓட்டினார்.

விளாச்சேரி சீனிவாசா காலனியில் பகுதியில் அந்த லாரி சென்றபோது, மர்மநபர் லாரியை தாறுமாறாக ஓட்டினார். அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மோதினார். இதில் அந்த கார் சேதமடைந்தது. மேலும் அந்த நபர் மின்னல் வேகத்தில் லாரி ஓட்டினார். அடுத்து தனக்கன்குளம் நேதாஜிநகர் குடியிருப்புக்குள் சென்ற அவர், சாலையோரம் நின்றிருந்த 2 ஷேர் ஆட்டோக்கள் மீது மோதிவிட்டு அதிவேகத்தில் சென்றார். முன்னதாக லாரி மோதியதில், 2 ஆட்டோக்களும் சேதமடைந்தன.

பின்னர் அந்த லாரி தனக்கன்குளம் பகுதியில் சென்றபோது சாலையோரம் இருந்த 2 மின் கம்பங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் 2 மின்கம்பங்களும் சேதமடைந்தன. இதன்காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மீண்டும் அந்த லாரி மின்னல் வேகத்தில் திருநகர் ஆசிரியர் காலனி வழியாக திருப்பரங்குன்றம் நோக்கி சென்றது.

தாறுமாறாகவும், மின்னல் வேகத்திலும் சென்ற லாரியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சினிமா பட காட்சிகள் போன்று லாரி மின்னல் வேகத்தில் சென்று கார், ஆட்டோக்கள், மின்கம்பங்கள் மோதிவிட்டு நிற்காமல் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இறுதியாக அந்த லாரி திருப்பரங்குன்றம் அருகில் போய் நின்றது. இதனையடுத்து லாரியை மின்னல் வேகத்தில் ஓட்டிய நபரை பொதுமக்கள் பிடித்து, ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்