திருவள்ளூரில் ரூ.30 லட்சம் குட்காவை பதுக்கி விற்ற வியாபாரி கைது

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக விற்பனை செய்த வியாபாரி கைது செய்துள்ளார்.

Update: 2019-09-14 22:54 GMT
திருவள்ளூர்,

திருவேற்காடு செந்தமிழ்நகர் பாரதியார் தெருவை சேர்ந்த வீரமணி (வயது 38). இவர் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கத்தூர் கன்னிமாநகர் பகுதியில் குடோன் ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கு பிஸ்கெட்டுகள் மற்றும் சாக்லெட்டுகள் உள்ளிட்ட தின்பண்டங்களை வைத்து கடைகளுக்கு வியாபாரம் செய்து வந்தார்.

இந்நிலையில் அவர் குடோனை முறைகேடாக பயன்படுத்தி அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக விற்பனை செய்து வந்துள்ளார்.

இதுபற்றி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில், போலீசார் நேற்று அந்த குடோனுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு ரூ.30 லட்சம் மதிப்புள்ள குட்கா மூட்டை மூட்டையாக வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து வீரமணியை கைது செய்து அவரிடம் இருந்து காரையும் பறிமுதல் செய்த மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்