சோழவரத்தில்,அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல் - அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து நடந்தது

டிக்கெட் கட்டணம் அதிகம் வசூலிப்பதை கண்டித்து சோழவரத்தில் அரசு டவுன் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்து மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-09-15 22:00 GMT
அடுக்கம்பாறை,

வேலூரில் இருந்து அமிர்தி, நாகநதி, நஞ்சுகொண்டாபுரம், பென்னாத்தூர் வழித்தடத்தில் 3 அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோன்று கணியம்பாடி, சாத்துமதுரை, அடுக்கம்பாறை, கீழ்அரசம்பட்டு வழித்தடத்திலும் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடங்களில் தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

வேலூரில் இருந்து சோழவரத்துக்கு தனியார் பஸ்களில் ரூ.15 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அரசு பஸ்களில் ரூ.16 வசூலிக்கப்படுகிறது. இதேபோல் மற்ற ஊர்களுக்கும் அரசு டவுன் பஸ்களில் கட்டணம் அதிகம் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடத்தில் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர்கள் விழுப்புரத்தில்தான் அலுவலகம் உள்ளது, அங்கு சென்று கேளுங்கள் என்று கூறி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று சோழவரம் பஸ்நிலையத்தில் குவிந்தனர். அவர்கள் 11 மணியளவில் வேலூரில் இருந்து சோழவரத்துக்கு வந்த அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.

பின்னர் பஸ் செல்லமுடியாதபடி பஸ்சின் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் வேலூர் தாலுகா போலீசார், பென்னாத்தூர் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்