கரூரில் இருந்து கேரளாவுக்கு 25 டன் மணல் கடத்தல்; லாரி பறிமுதல் - போலீசார் நடவடிக்கை

கரூரில் இருந்து கேரளாவுக்கு கடத்திய 25 டன் மணல் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-09-15 21:45 GMT
பொள்ளாச்சி, 

பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் கேரள எல்லையில் கோபாலபுரம் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனைச்சாவடியில் பொள்ளாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் உத்தரவின் பேரில், தாலுகா போலீசார் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக சதர்ன் ரெயில்வே பணி என எழுதி வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சிறு, சிறு மூட்டைகளாக கட்டி 25 டன் மணலை கரூரில் இருந்து கேரளாவுக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை.

இதனைத்தொடர்ந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 25 டன் மணலையும், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் மணல் மூட்டைகளுடன் லாரியை பொள்ளாச்சி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து லாரி டிரைவர் தர்மபுரியைச் சேர்ந்த சிஜூ என்பவரை பிடித்து தாசில்தார் தணிகைவேல் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இதுகுறித்து பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, லாரியின் உரிமையாளர் சேலத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்