கேத்தி பாலாடாவில் மயானத்துக்கு நிலம் ஒதுக்கக்கோரி, ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா போராட்டம்

கேத்தி பாலாடாவில் மயானத்துக்கு நிலம் ஒதுக்கக்கோரி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-16 22:45 GMT
ஊட்டி,

ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். அதன்படி கேத்தி பாலாடா பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மயானத்துக்கு நிலம் ஒதுக்கக்கோரி மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோரிக்கையை வலியுறுத்தி திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் குன்னூர் தாசில்தார் தினே‌‌ஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் சம்பந்தப்பட்ட இடத்தில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து, மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கேத்தி பாலாடாவில் அம்பேத்கர் நகர், திருவள்ளுவர் நகர், இந்திரா நகர், மாரியம்மன் கோவில் தெரு, சுப்பையா பாரதி காலனி உள்ளிட்ட பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதியில் இருந்து கொல்லிமலை செல்லும் சாலையோரத்தில் தனியாருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை மயானமாக பயன்படுத்தி வந்தோம். அங்கு கூடாரம் மற்றும் நடைபாதை அமைக்க கேத்தி பேரூராட்சி நிர்வாகத்தினரை அணுகினோம்.

அதற்கு அவர்கள் மயான நிலம் அரசுக்கு சொந்தமாக இருந்தால், கூடாரம் மற்றும் நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அரசு சார்பில் இதுவரை பொதுமக்களுக்கு மயானம் நிலம் ஒதுக்கப்படவில்லை. இதற்கிடையே இறந்தவர்களின் உடல்களை மயானத்துக்கு கொண்டு செல்ல நடைபாதை வசதி இல்லாமல் அவதி அடைந்து வருகிறோம். எனவே பொதுமக்கள் நலன் கருதி மயானம் அமைக்க அரசு புறம்போக்கு நிலத்தில் இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கோத்தகிரியை சேர்ந்த பொதுமக்கள் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோத்தகிரி சக்திமலை சாலையில் ரே‌‌ஷன் கடை அருகே மதுக்கடை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் 150 குடியிருப்புகள், தனியார் பள்ளி, உதவி தொடக்கக்கல்வி அலுவலகம், மின்வாரிய அலுவலகம், வணிக நிறுவனங்கள், தேவாலயங்கள், கோவில் உள்ளது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மதுக்கடை வந்தால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். எனவே மதுக்கடை திறக்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

நீலகிரி மாவட்ட பெந்தெகோஸ்தே திருச்சபைகள் மாமன்றம் சார்பில் அதன் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், ஊட்டி பாம்பேகேசில் பகுதியில் நேற்று முன்தினம் போதகர் ஜான் மற்றும் அவரது மனைவி துண்டு பிரசுரம் வழங்கி கொண்டி இருந்தனர். அப்போது அங்கு வந்த சிலர் அவர்கள் இருவரையும் தாக்கி, தகாத வார்த்தைகளை பேசினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் உரிமையையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க அனைத்து கிறிஸ்தவர்களையும் அழைத்து போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்