பல்லடத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 25 பேர் கைது

பல்லடத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-09-16 22:45 GMT
காமநாயக்கன்பாளையம்,

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகில் மேற்கு சடையபாளையத்தில் உயர்மின்கோபுரம் அமைப்பதற்காக நிலத்தை அளவீடு செய்ய காவல்துறை உதவியுடன் பவர்கிரிட் நிறுவனத்தினர் சென்றனர். அங்கு இவர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறியும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளையும், சங்க நிர்வாகிகளையும் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து விவசாய சங்க நிர்வாகிகள் 5 பேரை மட்டும் கைது செய்து விட்டு மற்றவர்களை விடுவித்து விட்டனர். கைதான விவசாய சங்க நிர்வாகிகளை விடுவிக்க கோரி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் பல்லடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பபட்டது.

இதையடுத்து பல்லடம் கொசவம்பாளையம் சாலையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கோரி இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை பல்லடம் கொசவம்பாளையத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் தங்கராஜ் தலைமையில் விவசாயிகள் சங்கத்தினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்தனர். இதில் மாநில துணைத்தலைவர் சண்முகசுந்தரம் ,திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், குண்டடம் ராசு,பல்லடம் வேல்மணி, மைனர் தங்கவேல் ,ஏர்முனை மாணிக்கராஜ், சுசீந்தரன் உள்ளிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்