போலி ஆவணங்கள் கொடுத்து நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் மோசடி - தொழில் அதிபர் கைது

போலி ஆவணங்கள் கொடுத்து தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் மோசடி செய்த தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்தவரை தேடி வருகின்றனர்.

Update: 2019-09-16 22:00 GMT
அடையாறு,

சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனம் சார்பில், கடந்த ஜூன் மாதம் மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

சென்னை மாதவரத்தை அடுத்த மாத்தூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 37) என்பவர் எங்கள் நிறுவனத்தில் 2 டிரைலர் லாரிகளுக்கு ரூ.10 லட்சம் கடன் வாங்கினார். ஆனால் கடனை திருப்பிக்கொடுக்காததால் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போதுதான் அது வேறு நபர்களின் லாரிகள் என்பது தெரிந்தது.

பின்னர் மணிகண்டன் அளித்த ஆர்.சி. புக்கை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சோதித்தபோது, அது போலியானது என்பது தெரிந்தது. அதன்பிறகுதான் மணிகண்டன் ஆர்.சி. புக் உள்பட போலி ஆவணங்களை கொடுத்து எங்களை ஏமாற்றி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு தலைமறைவானது தெரிந்தது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இது குறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு சமீபத்தில் மயிலாப்பூர் துணை கமிஷனரால் தனிப்படை போலீசுக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து துணை கமிஷனர் ஜெயலட்சுமியின் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அகஸ்டின் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மாத்தூரில் பதுங்கி இருந்த மணிகண்டனை மடக்கிப்பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அதில் மணிகண்டன், மாத்தூர் பகுதியில் சொந்தமாக திருமகள் டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் டிரைலர் லாரிகள் வைத்து, வியாபாரம் செய்து வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, தன்னிடம் இருந்த லாரிகளை விற்பனை செய்துவிட்டார்.

பின்னர் அதே பகுதியில் உள்ள கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கும் ஒரு யார்டில் நீண்டநாட்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2 லாரிகளின் எண்களை வைத்து, செல்வம் என்பவரது உதவியுடன், அந்த லாரிகளுக்கு தனது பெயரில் போலியாக ஆர்.சி. புக் தயாரித்தார்.

அதனை காட்டி தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

மணிகண்டன் தங்கி இருந்த இடத்தில் சோதனை செய்ததில், கடன் பெற்ற லாரிகளின் எண்களில் போலி ஆர்.சி.புக், அவர் பெயரில் வெவ்வேறு பிறந்த தேதிகள் அச்சிட்ட ஆதார் அட்டைகள், பான்கார்டுகள், பல்வேறு பத்திரிகை பெயர்களில் பிரஸ் கார்டுகள் இருப்பதை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து மணிகண்டனை கைது செய்த மயிலாப்பூர் போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைதான மணிகண்டன் மேலும் யாரிடமாவது இதுபோல் மோசடியில் ஈடுபட்டு உள்ளாரா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த மோசடிக்கு துணையாக இருந்து போலி ஆர்.சி.புக் அச்சடித்து கொடுத்த செல்வம் என்பவரையும் தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்