கோவையில் பரபரப்பு 6 மாதங்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி கொன்று புதைப்பு - பணத்தகராறில் நண்பர்கள் வெறிச்செயல்

கோவையில், 6 மாதங்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். பணம் கொடுக்கல்- வாங்கல் தகராறில் நண்பர்களே இந்தவெறிச்செயலில்ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-09-16 23:30 GMT
மேட்டுப்பாளையம், 

கோவை க.க.சாவடி அருகே உள்ள குட்டிகவுண்டன்பதி பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் மாரிமுத்து (வயது 40), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஜெயந்தி தனது கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் செட்டிப்பாளையம் மயிலேறிபாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மாரிமுத்து குட்டி கவுண்டன்பதியில் உள்ள தனது தாயார்கருப்பாள்(70) வீட்டில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாரிமுத்து திடீரென்று மாயமானார். அவர் எங்கு சென்றார் என்ற விவரம் அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரியவில்லை. இதைத்தொடர்ந்து மாரிமுத்துவின் தாயார் கருப்பாள் மற்றும் ஜெயந்தி க.க.சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாரிமுத்து மாயமானதால் இந்த வழக்கில் துப்பு துலக்க, கோவை மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் தூயமணி வெள்ளைச்சாமி (மதுக்கரை), மணிவண்ணன் (வடவள்ளி) ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் பல்வேறு இடங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த சுந்தர் (45) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசியல் கட்சி கோஷ்டி மோதல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இதன் பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். சுந்தர் சிறையில் இருந்த போது ரவுடிகள் சிலர் பட்டாக்கத்திகளுடன் கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் சுந்தரின் செல்போனில் இருந்து வெளியாகி சமூகவலைத் தளங்களில் பரவி வைரலானது. இதையடுத்து சரவணம்பட்டி போலீசார் ஜாமீனில் வெளியே வந்த சுந்தரை மீண்டும் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் சுந்தர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 13 பேர் சேர்ந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவர்களுடைய நண்பரான கோவை குட்டிகவுண்டன்பதி பகுதியை சேர்ந்தமாரி முத்துவை பணம் கொடுக்கல் - வாங்கல்தகராறு தொடர்பாக அவரை கடத்த திட்டம் தீட்டி உள்ளனர்.

இதைத் தொடர்ந்து சுந்தர் உள்பட அந்த கும்பல் மாரிமுத்துவை க.க.சாவடிநாச்சிபாளையம் அருகே கடத்தி, கோவில்பாளையத்தில் உள்ள ஒருவீட்டிற்கு கொண்டு சென்று பணம் கேட்டு மிரட்டி அடித்து உதைத்தனர். இதனால் மாரிமுத்து சத்தம்போட்டார். அதுகுடியிருப்பு பகுதி என்பதால் மாரிமுத்துவை இரவோடு இரவாக அங்கிருந்து மேட்டுப்பாளையம்- அன்னூர் மெயின் ரோட்டில் பொகளூர் அருகே தேவாங்கபுரம் பகுதியில் உள்ள சிவா என்பவரின் வீட்டிற்கு கொண்டு சென்றனர்.

அங்கு மாரிமுத்துவை மீண்டும் பணம் கேட்டு மிரட்டி அடித்து உதைத்தனர். இதில் வலி தாங்க முடியாமல் அலறிய மாரிமுத்து ஒரு கட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதை சற்றும் எதிர்பாராத அந்த கும்பல் அதிர்ச்சி அடைந்து உடனடியாக மாரிமுத்துவின் உடலை அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் புதைத்து விட்டனர்.

இந்தநிலையில் மாரிமுத்து காணாமல் போனதாக அவரது தாயார் க.க.சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்ததால்,மாநகர போலீசார் சுந்தரை க.க. சாவடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து கோவைமாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின் பேரில் பேரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் மதுக்கரை இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷாஜகான், ராஜ்குமார் மற்றும் போலீசார் சுந்தரிடம் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின் பேரில் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய சுந்தரின் நண்பர் முத்துவேலை கைதுசெய்தனர்.

இதைத்தொடர்ந்து, கொலை செய்யப்பட்டு மாரிமுத்து புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காணவும், பிரேத பரிசோதனைக்காகவும் சுந்தர் மற்றும் 2 பேரையும் போலீசார் சம்பவ இடத்திற்கு கூட்டி செல்ல முடிவு செய்தனர். இதையொட்டி நேற்று மதியம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுந்தர், முத்துவேல் ஆகிய 2 பேரையும் சம்பவ இடத்திற்கு கூட்டி சென்றனர்.

அன்னூர் தாசில்தார் சந்திரா முன்னிலையில் மாரிமுத்துவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை சுந்தர் அடையாளம் காட்டினார். இதையடுத்து பிணம் தோண்டி எடுக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் ஜெயசிங் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்