முன்னாள் நகராட்சி துணை தலைவர் கொலை மிரட்டல் விடுக்கிறார் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் போலீஸ்காரர் மனு

முன்னாள் நகராட்சி துணை தலைவர் கொலை மிரட்டல் விடுக்கிறார் என புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் போலீஸ்காரர் ஒருவர் மனு அளித்தார்.

Update: 2019-09-16 22:45 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மனு

கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கத்தின் சார்பில் கொடுத்த மனுவில், 2012-ம் ஆண்டு மத்திய அரசு கேபிள் டி.வி தொழிலை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என அறிவுறுத்தியது. படிபடியாக நாங்களும் எங்களது தொழிலை மத்திய அரசின் உரிமம் பெற்று, டிஜிட்டல் சிக்னல், செட்டாப் பாக்ஸ்களை பெற்று, வாடிக்கையாளர்களுக்கு அமைத்து கொடுத்தோம். இந்நிலையில் எங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய எம்.ஐ.பி.யால் நியமனம் செய்யப்பட்ட சில அதிகாரிகள் டி.ஏ.சி.டி.வி.க்கு மட்டும் உறுதுணையாக செயல்படுகின்றனர். மேலும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக நாங்கள் கம்பத்தில் கட்டி உள்ள கேபிள்களை அகற்ற வேண்டும் அல்லது துண்டித்து விடுவோம் எனக்கூறி வருகின்றனர். எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

போலீசுக்கு கொலை மிரட்டல்

புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ் காரராக பணியாற்றி வரும் ராஜசேகரன் என்பவர் கொடுத்த மனுவில், எனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் நபர் பொதுப்பாதையை ஆக்கிரமிப்பு செய்து உள்ளார். இது குறித்து நான் புகார் கொடுத்ததை தொடர்ந்து புதுக்கோட்டை தாசில்தார் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்றும்படி நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு உள்ளார். ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. மேலும் முன்னாள் நகராட்சி துணை தலைவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே நகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கலெக்டர் உத்தரவிட வேண்டும் எனக்கூறியிருந்தார்.

கறம்பக்குடி தாலுகா முன்னங்குறிச்சி தெற்கு கோட்டைக்காடு பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் சார்பில் ராஜ்குமார் என்பவர் கொடுத்த மனுவில், கோட்டைக்காடு ஆதிதிராவிடர் தெருவில் உள்ள அரசுக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து, வேலிகள் கூரை கொட்டகைகள் போட்டு உள்ளனர். மேலும் அவர்கள் அரசு நிலத்தில் உள்ள மரங்களை வெட்டி உள்ளனர். இது தொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஆக்கிரமிப்பு செய்து உள்ள தனிநபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்