ஈரோடு கருங்கல்பாளையம் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்; மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு

ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2019-09-16 22:15 GMT
ஈரோடு,

மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

தமிழ்நாடு கேபிள் டி.வி. சங்கங்களின் கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் ஜி.தாமோதரன் தலைமையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:-

அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று அரசு வலியுறுத்துகிறது. ஆனால் செட்டாப் பாக்ஸ் தாராளமாக கிடைப்பதில்லை. இணைப்பு வழங்கப்பட்ட அரசு செட்டாப் பாக்ஸ்களில் குறிப்பிட்ட சில சேனல்கள் தெரியாததால் வாடிக்கையாளர்கள் தகராறு செய்கின்றனர். ஒளிபரப்பு செய்வதில் தடை ஏற்பட்டால், தகவல் தெரிவித்தும் உடனடியாக சரி செய்யப்படுவது கிடையாது. அரசு, தனியார் செட்டாப் பாக்ஸ்களின் சேவையை கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் செய்து வருகின்றனர். தற்போது தனியார் கேபிள் டி.வி. இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன. மேலும், அரசு செட்டாப் பாக்ஸ் மூலமாக 90 சேனல்களுக்கு ஜி.எஸ்.டி. சேர்த்து ரூ.154 கட்டணம் வசூலிக்கிறது என்று அரசு அறிவித்து உள்ளது. ஆனால் 90 சேனல்களும் கிடைப்பதில்லை. எனவே கேபிள் டி.வி.யில் உள்ள குறைகளை களைந்து முழுமையான சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

மக்கள் நீதி மய்யத்தின் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் சிவக்குமார் தலைமையில் கட்சியினர் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:-

கோபிசெட்டிபாளையம் அருகே கலிங்கியம் ஊராட்சியில் 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படுவதில்லை. குறைந்த ஊதியத்தையும் குறித்த காலத்தில் கொடுக்காமல் பல மாதங்கள் நிலுவை வைத்துள்ளனர். மேலும், முதியவர்களுக்கு வேலை கொடுக்காமல் நிராகரித்து விடுகிறார்கள். இந்த 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம்தான் அந்த மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. எனவே அவர்களுக்கு வேலையும், முழு ஊதியமும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:-

எங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மது வாங்கிவிட்டு வெளியே வருபவர்கள் சாலையோரமாகவும், வீடுகளின் முன்பும் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் பெண்கள் அந்த வழியாக நடந்து செல்லவே முடிவதில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் கடைக்கு அருகில் வாலிபர் ஒருவர், 4 பேர் கொண்ட கும்பலால் குத்தி கொலை செய்யப்பட்டார். அசம்பாவித சம்பவங்கள் நடப்பதால் மிகவும் அச்சத்துடன் உள்ளோம். எனவே அந்த டாஸ்மாக் கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

மக்கள் மன்ற அமைப்பாளர் செல்லப்பன் கொடுத்த மனுவில், “ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களது ஒருநாள் கூலியை இழந்து பல மணிநேரம் காத்திருந்து மனுக்களை கொடுக்கின்றனர். ஆனால் பெரும்பாலான மனுக்கள் மீது எந்தவொரு தீர்வும் ஏற்படாத வகையில் உள்ளது. இதனால் பலர் தீக்குளிப்பு, சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். எனவே பொதுமக்களின் கோரிக்கை மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தீர்வு காணாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது நிறைவேற்றப்படவில்லை என்றால், வருகிற 30-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில பொதுச்செயலாளர் மாரிமுத்து கொடுத்த மனுவில், “ஈரோடு மாவட்ட போலீஸ் துறை அதிகாரிகள் ஜனநாயகத்துக்கு புறம்பாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும் வகையில் செயல்படுகின்றனர். ஜனநாயக முறைப்படி நடத்தப்படும் கூட்டங்கள், வன்முறை சம்பவங்களில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, கோரிக்கைகளை வலியுறுத்தும் ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே இந்த அநீதியை கைவிடக்கோரியும், அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கக்கோரியும் வருகிற அக்டோபர் மாதம் 3-ந் தேதி காலை 9 மணிக்கு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருக்கிறேன்”, என்று கூறிஇருந்தார்.

சத்தியமங்கலம் அருகே செண்பகப்புதூர் குழித்தோட்டம் பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவர் கொடுத்த மனுவில், “எங்கள் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கால்நடைகளை வளர்த்து வருகிறார்கள். கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உக்கரம் பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே செண்பகப்புதூர் பகுதியில் கால்நடை ஆஸ்பத்திரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.”, என்று வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

நம்பியூர் கோவை ரோடு பகுதியை சேர்ந்த பால்ராஜ் (வயது 50) என்பவர், தான் மதபோதகராக இருப்பதாகவும், தன்னை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மனு கொடுத்தார். இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 378 மனுக்களை கொடுத்தனர்.

கூட்டத்தில் முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் ஒருவருக்கு கல்வி உதவித்தொகை ரூ.50 ஆயிரம் பெறுவதற்கான உத்தரவும், மற்றொருவருக்கு ரூ.10 ஆயிரத்து 802 வங்கிக்கடன் வட்டி மானியம் பெறுவதற்கான உத்தரவையும் கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார். மேலும், நஞ்சை ஊத்துக்குளியை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவருக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தினேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்