வெள்ளப்பெருக்கு குறைந்தது: குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

Update: 2019-09-16 22:30 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் ஐந்தருவியில் நேற்று முன்தினம் மாலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இரவில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

நேற்று காலை வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதே போல் மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் நேற்று தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 960 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 1,172 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 118.85 அடியாக இருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 128.15 அடியாக இருந்தது.

மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 135 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் ஆகிய அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இந்த அணைகளில் இருந்து உபரி நீர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

சங்கரன்கோவில் -20, குண்டாறு -16, பாபநாசம் -4, சேர்வலாறு -3, தென்காசி -2, செங்கோட்டை -2, அடவிநயினார் -2, ஆய்க்குடி -1, கருப்பாநதி -1.

மேலும் செய்திகள்