தூத்துக்குடி அருகே பயங்கரம்: மது குடித்ததை தட்டிக்கேட்ட லாரி டிரைவர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி அருகே நண்பர் வீட்டின் அருகே அமர்ந்து மது குடித்ததை தட்டிக்கேட்ட லாரி டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-16 22:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை மேலக்கூட்டுடன்காடை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரின் மகன் சொரிமுத்து (வயது 36), லாரி டிரைவர். புதுக்கோட்டை ராமசந்திராபுரத்தை சேர்ந்தவர் வள்ளிநாயகம், லாரி கிளனர். இவர்கள் 2 பேரும் நண்பர்கள். வள்ளிநாயகம் குடும்பத்தை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு இவர்கள் 2 பேரும் வேலையை முடித்து விட்டு வள்ளிநாயகம் வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டுக்கு அருகில் அமர்ந்து 5 பேர் கொண்ட கும்பல் மது குடித்து கொண்டு இருந்தது. இதனை பார்த்த சொரிமுத்துவும், வள்ளிநாயகமும் இங்கு மது அருந்த கூடாது என்று அவர்களை சத்தம் போட்டனர். இதில் அந்த கும்பலுக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன்பின்னர் அந்த கும்பல் அங்கு இருந்து சென்று விட்டது.

பின்னர் வள்ளிநாயகம் வீட்டுக்குள் சென்று படுத்துவிட்டார். சொரிமுத்து வீட்டின் முன்பு உள்ள திண்ணையில் படுத்து தூங்கினார். சிறிது நேரத்தில் 5 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்கள், வீட்டின் திண்ணையில் படுத்து இருந்த சொரிமுத்துவை எழுப்பி, அவரிடம் தகராறு செய்தனர். அப்போது ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் சொரிமுத்துவின் 2 கைகளிலும் சரமாரியாக வெட்டினர்.

இதில் ரத்தம் அதிக அளவில் வெளியேறியதால் சொரிமுத்து சிறிது நேரத்தில் உயிர் இழந்தார். இதனையறிந்த அந்த கும்பல் அங்கு இருந்து தப்பி சென்று விட்டது. வீட்டுக்குள் இருந்த வள்ளிநாயகத்துக்கு இந்த சம்பவம் தெரியவில்லை. நேற்று காலையில் சொரிமுத்து பிணமாக கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சொரிமுத்துவை தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியை சேர்ந்த காடை என்ற காளியப்பன், புதுக்கோட்டை சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்த இருதய சுரேஷ் (31), மார்கஸ் பீட்டர் (21), மீனாட்சிப்பட்டியை சேர்ந்த கணேஷ் (23) மற்றும் சாத்தான்குளத்தை சேர்ந்த செல்லப்பா (20) ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து புதுக்கோட்டை போலீசார் நேற்று மாலையில் இருதய சுரேஷ், மார்கஸ் பீட்டர், கணேஷ், செல்லப்பா ஆகியோரை பிடித்து கைது செய்தனர். மேலும் தலைமறைவான காளியப்பனை தேடி வருகின்றனர். இவர் மீது தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் பல குற்ற வழக்குகள் உள்ளன. அவர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். கொலை செய்யப்பட்ட சொரிமுத்துவிற்கு பத்மாவதி என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். இந்த பயங்கர கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்