தஞ்சை மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை - கணக்கில் வராத ரூ.1 லட்சம் சிக்கியது

தஞ்சை மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.1 லட்சம் சிக்கியது.

Update: 2019-09-16 22:30 GMT
தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகம் சிவகங்கை பூங்கா அருகே செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் தஞ்சை புதிய கலெக்டர் அலுவலகத்தின் பின்பகுதியில் கட்டப்பட்டது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்திரப்பதிவு அலுவலகம் புதிய கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் என 6 பேர் நேற்று மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்து திடீர் சோதனை நடத்தினர். மாலை தொடங்கிய இந்த சோதனை இரவிலும் நீடித்தது.

இந்த சோதனையின்போது கணக்கில் வராத பணம் ரூ.1 லட்சம் சிக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் போலீசார் சோதனை நடத்தியபோது மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் டார்ச் லைட் மற்றும் செல்போன் வெளிச்சம் மூலம் சோதனை நடத்தினர்.

நேற்று பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு பத்திரப்பதிவு செய்வதற்காகவும், புதிதாக திருமணம் ஆன ஜோடிகள் 4 பேர் தங்கள் திருமணத்தை பதிவு செய்வதற்காகவும் வந்திருந்தனர். லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தியதால் வெகுநேரம் காத்திருந்த அவர்கள் பின்னர் வேறு ஒரு நாள் வருமாறு கூறியதை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்