தலைமை ஆசிரியை வீட்டில் ரூ.13 லட்சம் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விருத்தாசலத்தில் தலைமை ஆசிரியை வீட்டில் ரூ.13 லட்சம் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-09-16 23:00 GMT
விருத்தாசலம்,

விருத்தாசலம் ஆலடி சாலை காமராஜர் நகர் புதிய பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன்(வயது 63). ஓய்வு பெற்ற தபால் ஊழியர். இவருடைய மனைவி அம்பிகா(57). இவர் பெண்ணாடம் அருகே உள்ள மேலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் தங்களது வீட்டை பூட்டிவிட்டு கடந்த 6-ந்தேதி ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோவிலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். பின்னர் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டுக்கு வந்தனர்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. மேலும் சமையலறையின் ஜன்னல் கம்பிகளும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், வீட்டில் இருந்த பீரோவை பார்த்தனர். அப்போது துணிமணி கள் மற்றும் பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் அதில் வைத்திருந்த 45 பவுன் நகை, ரூ.6 ஆயிரம், ¾ கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

பின்னர் இதுகுறித்து விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் சமையலறை ஜன்னல் கம்பிகளை உடைத்து அதன் வழியாக உள்ளே சென்றுள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.13 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் விழுப்புரத்தில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்