மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

Update: 2019-09-16 22:45 GMT
மேட்டூர், 

கர்நாடக மாநிலத்தில் பெய்த மழையின் அளவு குறைந்துள்ளது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை வந்தடைகிறது.

இதனால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்தானது நேற்று மாலை வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

இந்தநிலையில் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு நேற்று மாலை வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியில் இருந்து 16 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு தொடர்ந்து வினாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 16 ஆயிரத்து 900 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணை கடந்த 7-ந்தேதி தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. அன்றைய தினத்தில் இருந்து தொடர்ந்து அணை நீர்மட்டம் 120 அடியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து நேற்றும் அதே அளவில் இருந்தது. இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அலுவலர்கள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.

காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தபோதிலும் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. இருப்பினும் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்