மீண்டும் பணி வழங்க கோரி பிளேடால் கையை அறுத்த ரேஷன்கடை விற்பனையாளர்

மீண்டும் பணி வழங்க கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரேஷன்கடை விற்பனையாளர் பிளேடால் கையை அறுத்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-16 22:30 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் மனுக்கள் கொடுக்க வந்திருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலக போர்டிகோ அருகே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு நபர் திடீரென பிளேடால் தனது கையை அறுத்து கொண்டதால் ரத்தம் கொட்டியது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அவரை பிடித்து கையில் வைத்திருந்த பிளேடை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த பாபு (வயது 39) என தெரியவந்தது. மேலும் பாப்பிரெட்டிப்பட்டி அருகே தேவராஜபாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்ததாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு துறைரீதியான நடவடிக்கைக்கு உள்ளாகி பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

போதிய வருமானம் இல்லாத நிலையில் குடும்பத்தினரை காப்பாற்ற சிரமப்படுவதால் மீண்டும் பணி வழங்க கோரி பிளேடால் கையை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட அவர் அங்கு வந்தது விசாரணையில் தெரியவந்தது. அவருக்கு உரிய முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரேஷன் கடை விற்பனையாளர் தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பிலேடால் கையை அறுத்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்