கடத்தூர் பேரூராட்சியில் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல்

கடத்தூர் பேரூராட்சியில் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த காலாவதியான குளிர்பானங்களை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-09-16 22:15 GMT
மொரப்பூர்,

தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு, மருந்து நிர்வாகத்துறை மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா, பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகம் ஆகியோர் சோதனை நடத்த உத்தரவிட்டனர். அதன் பேரில் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் கடத்தூர் பேரூராட்சி பணியாளர்கள், அலுவலர்கள் கடத்தூர் பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், பேக்கரி கடைகள், இறைச்சி, மீன் கடைகள், தள்ளுவண்டி கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பெட்டிக்கடைகள், மளிகை, பேக்கரி கடைகளில் காலாவதியான பிளாஸ்டிக் கப்புகள், பைகள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்கு வைத்து இருந்த கடைக்காரர்களுக்கு பேரூராட்சி அலுவலர்கள் அபராதம் விதித்தனர். மேலும் ரூ.3 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், காலாவதியான குளிர்பானங்கள் ஆகியவற்றை அலுவலர்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.

இந்த சோதனையின் போது பிளாஸ்டிக் பைகளில் உணவு பொருட்கள் வழங்கக்கூடாது. அதற்கு பதிலாக வாழை இலை, பாக்கு மட்டை போன்ற மாற்றுப்பொருட்களை உபயோகப்படுத்த வேண்டும். இறைச்சி, மீன்கள் உள்ளிட்ட உணவு பொருட்களில் ரசாயன பவுடர் சேர்க்க கூடாது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் கடைக்காரர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்