அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி; மலைவாழ் மக்கள் தர்ணா போராட்டம்

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நேற்று மலைவாழ் மக்கள் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-16 21:45 GMT
வேலூர், 

அணைக்கட்டு ஒன்றியத்தில் உள்ள பீஞ்சமந்தை, பாலாம்பட்டு, ஜார்தான்கொல்லை ஆகிய ஊராட்சிகளில் இதுவரை சாலைவசதி, தெருவிளக்கு, குடிநீர், மருத்துவ வசதி செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை கண்டித்தும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் நேற்று வேலூர் மாவட்ட மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டம் நடந்தது. மலைவாழ் மக்கள் சங்க தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான லதா தலைமை தாங்கினார். ரவி வரவேற்றார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சாமிக்கண்ணு, மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுசெயலாளர் நஞ்சப்பன் ஆகியோர் தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.

தர்ணாவின்போது மலைவாழ் மக்களுக்கு சாலை வசதிகள், குடிநீர் வசதி, ரேஷன்கடை, கல்வி வசதி, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் வேலை அட்டை கிடைக்காத அனைத்து குடும்பங்களுக்கும் வேலை அட்டை வழங்க வேண்டும், பீஞ்சமந்தை பகுதியில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றி 24 மணிநேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் சண்முகசுந்தரத்திடம் வழங்கினர்.

மேலும் செய்திகள்