2-வது சீசன் தொடங்கியது: ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்கள் - சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.

Update: 2019-09-17 22:00 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுவது வழக்கம். கடந்த கோடை சீசனையொட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதால் பச்சை பசேல் என காணப்பட்ட புல்வெளிகள் கட்டாந்தரையாக மாறியது. அதனை தொடர்ந்து சீசன் முடிந்ததும், நூற்றாண்டு பழமை வாய்ந்த பூங்காவை 2-வது சீசனுக்கு தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

புற்கள் சேதமடைந்த பகுதிகளில் புதியதாக புற்கள் போடப்பட்டு பராமரிக்கப்பட்டது. அதிகமாக வளர்ந்து இருந்த புற்கள் எந்திரம் மூலம் வெட்டப்பட்டு அழகாக்கப்பட்டது. பராமரிப்பு பணியின் காரணமாக பெரிய புல்வெளி மைதானம், பெரணி இல்லம் பகுதி உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட வில்லை.

அதனை சுற்றிலும் கயிறு கட்டப்பட்டு இருந்தது. கோடை சீசனின் போது நடவு செய்யப்பட்ட மலர் செடிகளில் பூத்து ஓய்ந்த மலர்களில் இருந்து விதைகள் சேகரிக்கப்பட்டு, தரமான விதைகள் நர்சரியில் வளர்க்கப்பட்டது. 2-வது சீசனையொட்டி 10 ஆயிரம் பூந்தொட்டிகளில் மண் நிரப்பப்பட்டு, பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன.

மேலும் 2-வது சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், 125 ரகங்களை சேர்ந்த 2½ லட்சம் மலர் செடிகள் நடைபாதை ஓரங்கள், மலர் பாத்திகள், மரங்களை சுற்றிலும் நடவு செய்யப்பட்டன. குறிப்பாக பிரெஞ்சு மேரிகோல்டு, சால்வியா, டையான்தஸ், பிகோனியா, ஜீனியா, டேலியா, செல்லோசியா, பெட்டுனியா, பிளாக்ஸ், கேலண்டுலா போன்ற வகை மலர் செடிகள் நடவு செய்யப்பட்டது.

இந்த செடிகள் நன்கு வளர இயற்கை உரம் போடப்பட்டது. ஊட்டியில் பருவமழை தொடர்ந்து பெய்ததாலும், காலநிலையில் மாற்றம் ஏற்பட்டதாலும் மலர் செடிகளில் பூக்கள் பூக்க தாமதம் ஆனது. இதற்கிடையே தற்போது 2-வது சீசன் தொடங்கி நடந்து வருகிறது.

இதையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகளில் பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இத்தாலியன் பூங்காவில் பூத்து உள்ள மேரிகோல்டு, சால்வியா உள்ளிட்ட மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதோடு, செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர்.

பூக்கள் பூத்து குலுங்குவதால் பூங்காவே வண்ணமயமாக காட்சி அளிக்கிறது. இதுதவிர பல வகை மலர்கள் அடங்கிய பூந்தொட்டிகள் இன்று (புதன்கிழமை) காட்சி மாடத்தில் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக அடுக்கி வைக்கப்பட உள்ளது. 

மேலும் செய்திகள்