பிரதமர் மோடி-சீன அதிபர் வருகை மாமல்லபுரத்தில் கலெக்டர் ஆய்வு

பிரதமர் மோடி- சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் கலெக்டர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2019-09-17 22:30 GMT
மாமல்லபுரம்,

உலகப்புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்திற்கு வருகிற அக்டோபர் மாதம் 11-ந்தேதி சீனஅதிபர் ஜின்பிங், பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் 3 நாள் பயணமாக வருகை தர உள்ளனர். மாமல்லபுரம் கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்வையிட உள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் சீனா-இந்தியா இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளனர்.

இந்த நிலையில் சீன அதிபர், பிரதமர் நரேந்திரமோடி வருகையையொட்டி மாமல்லபுரத்தில் நேற்று அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள், சாலை ஓர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவது, பழுதடைந்த சாலைகளை செப்பனிடுவது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில் சாலை, ஐந்துரதம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்ட கலெக்டர் பொன்னையா, போலீஸ் உதவியுடன் அர்ச்சுனன் தபசு அமைந்துள்ள மேற்குராஜ வீதி மற்றும் கிழக்கு ராஜ வீதி, கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை, கோவளம் சாலை உள்ளிட்ட இடங்களில் சாலை ஓர ஆக்கிரமிப்பு கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் அகற்ற வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சுகாதார வசதி மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்வது குறித்தும் பேரூராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் பழுதடைந்த சாலைகளை பராமரிக்கவும் நெடுஞ்சாலைத்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மாமல்லபுரம் சரக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், திருக்கழுக்குன்றம் தாசில்தார் தங்கராஜ், மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி லதா, வருவாய் ஆய்வாளர் நாராயணன், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் அவருடன் வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்