குடிநீர் கேட்டு கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா

குடிநீர் கேட்டு கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-17 22:30 GMT
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி நகராட்சி 16-வது வார்டு கவரை தெருவில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி சார்பில் கூட்டுகுடிநீர் திட்டம் மற்றும் திறந்தவெளி கிணறு மூலம் தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 1 மாதமாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்களுக்கு டிராக்டர் மூலம் வாரத்துக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. போதுமான அளவுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.

இது குறித்து புகார் அளித்த பின்பும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலிகுடங்களுடன் அங்குள்ள சேலம் சாலையில் திரண்டனர்.

பின்னர் அவர்கள் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், உங்களது கோரிக்கை குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுங்கள். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து ஊர்வலமாக நகராட்சி அலுவலகத்துக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் அங்கு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொது மக்கள், தூர்ந்து போன திறந்த வெளி கிணறை முறையாக தூர்வாரி ஆழப்படுத்தி எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கூட்டு குடிநீர் திட்டம் மூலமும் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் நகராட்சி ஆணையர் சையத்முகமது கமால் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் 17-வது வார்டு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களது பகுதியில் உள்ள குடிநீர் தட்டுப்பாட்டையும் போக்க வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினர். அவர்களுக்கும் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் தெரிவித்தார். பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மக்கள் நேற்று முன்தினமும் குடிநீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கதாகும். முன்னதாக சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்