மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 8,454 பேர் மீது வழக்கு

திருச்சி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 8,454 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2019-09-17 22:15 GMT
திருச்சி,

மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும்் மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் அபராதத்தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டதால், சில மாநிலங்களில் இன்னமும் அமலுக்கு வரவில்லை. மேற்கு வங்காளத்தில் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மோட்டார் வாகன புதிய சட்டத்தின்படி, பொதுமக்களுக்கு அபராதத்தொகை உயர்த்தப்படாது என்றும் பழைய நடைமுறையே தொடரும் என அறிவித்தார்.

தமிழ்நாட்டில் இன்னமும் மத்திய அரசின் நிலைப்பாட்டை அமல்படுத்தவில்லை. மாறாக பழைய அபராத கட்டணமே தொடர்கிறது. அதன்படி, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றால், ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

தீவிர வாகன சோதனை

இந்த நிலையில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி உத்தரவுப்படி, மாநிலம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட, மாநகர சாலைகளில் ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் சோதனைச்சாவடி அமைத்து இருசக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டியது, லைசென்சு இல்லாதது, இன்சூரன்ஸ் இல்லாதது உள்ளிட்டவற்றுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

அதன்படி, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் போக்குவரத்து போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.இதுபோல திருச்சி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

8,454 பேர் மீது வழக்கு

2 நாட்கள் நடந்த இந்த இருசக்கர வாகன சோதனையில் திருச்சி மாநரில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக 4 ஆயிரம் பேர் மீதும், புறநகர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 454 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் லைசென்சு, இன்சூரன்ஸ் இன்றி வாகனம் ஓட்டியதாகவும் 200-க்கும் மேற்பட்ட வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இருசக்கர வாகன சோதனை தொடரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்