நாகர்கோவில் பள்ளம் கடற்கரையில் மீனவர்கள் மீட்டு கடலில் விட்ட டால்பின், இறந்து கரை ஒதுங்கியது

நாகர்கோவில் அருகே பள்ளம் கடற்கரையில் மீனவர்கள் மீட்டு கடலில் விட்ட டால்பின் இறந்து கரை ஒதுங்கியது.

Update: 2019-09-17 23:00 GMT
மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவில் அருகே பள்ளம் கடற்கரையில் கடந்த 15-ந் தேதி ஒரு டால்பின் மீன் கரை ஒதுங்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. அந்த டால்பின் 8 அடி நீளத்தில், சுமார் 140 கிலோ எடை இருந்தது. இதை கண்ட அந்த பகுதி மீனவர்கள் டால்பினை மீட்டு படகில் ஏற்றி ஆழ்கடலில் விட்டுவிட்டு கரை திரும்பினர்.

இந்தநிலையில், நேற்று அந்த டால்பின் மீன் இறந்த நிலையில் மீண்டும் பள்ளம் கடற்கரையில் கரை ஒதுங்கியது. இதை பார்த்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். டால்பின் அரியவகை உயிரின பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பரிசோதனை

நாகர்கோவில் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மீனை கைப்பற்றி பரிசோதனை செய்தனர். பின்னர், கடற்கரையிலேயே புதைத்தனர்.

இதுகுறித்து அந்த பகுதி மீனவர் ஒருவர் கூறுகையில், அரபிக்கடல் பகுதியில் டால்பின்கள் கூட்டமாக காணப்படுகிறது. கடந்த 15-ந் தேதி ஒரு டால்பின் கூட்டத்தில் இருந்து பிரிந்து கரை ஒதுங்கியது. அதை மீட்டு கடலுக்குள் விட்ட போது, அது துள்ளி குதித்தப்படி கடலுக்குள் சென்றது. ஆனால், அது எப்படியோ இறந்து மீண்டும் கரை ஒதுங்கியுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்