கயத்தாறு அருகே வீட்டில் வளர்த்த சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற 2 பேர் கைது

கயத்தாறு அருகே வீட்டில் வளர்த்த சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற 2 பேரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-17 22:00 GMT
கயத்தாறு,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே கம்மாபட்டியில் பெரும்பாலான வீடுகளில் சந்தன மரங்களை பல ஆண்டுகளாக வளர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நள்ளிரவில் அந்த சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டி கடத்தி சென்று வருகின்றனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் அப்பகுதியைச் சேர்ந்த சந்தனசாமி மகன் மிக்கேல்சாமி என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்ட சந்தன மரத்தை 3 மர்மநபர்கள் வெட்டி கடத்தி செல்ல முயன்றனர்.

அப்போது அவர்களை பார்த்து நாய்கள் குரைத்தன. உடனே கண் விழித்த மிக்கேல்சாமியின் குடும்பத்தினர், அவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்து ‘திருடன் திருடன்’ என்று கூச்சலிட்டனர்.

சத்தம் கேட்டு பொதுமக்கள் எழுந்து சென்று, மர்மநபர்களை விரட்டி பிடிக்க முயன்றனர்.

அப்போது அவர்களில் ஒருவர் தப்பி ஓடுவதற்காக அங்குள்ள வீட்டின் மாடியில் இருந்து குதித்தார். இதில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். மற்றொரு மர்மநபரை பொதுமக்கள் விரட்டிச் சென்று பிடித்தனர். மேலும் ஒருவர் இருளில் தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 2 மர்மநபர்களையும் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் மேட்டு தெருவைச் சேர்ந்த ஆண்டி மகன் எட்டுராஜ் (வயது 40), அவருடைய உறவினரான பாலு மகன் சாஸ்தா மணிகண்டன் (19) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்த எட்டுராஜை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து, போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் தப்பி ஓடிய தேனியைச் சேர்ந்த செல்வத்தை (45) வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, கோவில்பட்டி வனச்சரகர் சிவராம் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் அவர், வீடுகளில் சந்தன மரங்களை வளர்ப்பதற்கு வனத்துறையிடம் முறையாக அனுமதி பெற வேண்டும் என்று கிராம மக்களிடம் அறிவுறுத்தினார்.

கயத்தாறு அருகே சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற 2 பேரை பொதுமக்கள் விரட்டி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்