நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை - கலெக்டர் ஷில்பா எச்சரிக்கை

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஷில்பா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

Update: 2019-09-17 22:15 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடந்த 9-ந்தேதி மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மதியம் 12 மணிக்கு பாளையங்கோட்டை இலந்தைகுளத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 21) என்பவர் அரசு வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்ததால் தீக்குளிக்க முயற்சி செய்தார். அதேபோல் நேற்று முன்தினம் மானூர் அருகே உள்ள ரஸ்தா பகுதியை சேர்ந்த போதர் என்பவர் இடப்பிரச்சினையால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் ஆகும். எனவே இவர்கள் மீது போலீஸ் மூலம் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கையில் உள்ளது.

மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு வந்து தீப்பற்றிக் கொள்வது அருகில் உள்ளவர்களின் உயிருக்கும், உடமைக்கும் தீங்கு ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. இந்த செயல்கள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வரும் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு உயிர் பயத்தையும், மனதில் பீதியையும் ஏற்படுத்துகிறது.

எனவே பொதுமக்கள் தங்கள் சொந்த பிரச்சினைகளுக்கு கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள். பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் மனு கொடுத்தாலே போதும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல், சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்