திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

படைப்புழுவால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீடு தொகை வழங்க கோரி திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-17 21:30 GMT
திருவேங்கடம்,

நெல்லை மாவட்டம் திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். தமிழ்நாடு விவசாய சங்க திருவேங்கடம் தாலுகா செயலாளர் கருப்பசாமி தலைமை தாங்கினார். தாலுகா தலைவர் ராமமூர்த்தி, பொருளாளர் ரத்தினவேல், வக்கீல் ராகவன் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மத்திய குழு உறுப்பினர் விஜயமுருகன், மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயராஜ், தாலுகா செயலாளர் வேணுகோபால் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

திருவேங்கடம் தாலுகாவுக்கு உட்பட்ட மைப்பாறை, வரகனூர், ராமலிங்காபுரம், ஏ.கரிசல்குளம், செவல்குளம், தெற்கு குருவிகுளம், கே.ஆலங்குளம், பழங்கோட்டை, மகேந்திரவாடி, மருதங்கிணறு, செட்டிக்குளம், சாயமலை உள்ளிட்ட பகுதி விவசாயிகள் கடந்த 2017, 2018-ம் ஆண்டு மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு போன்ற பயிர்களுக்கு காப்பீடு செலுத்தி இருந்தனர். அந்த பயிர்கள் அனைத்தும் படைப்புழுக்களால் பாதிக்கப்பட்ட நிலையில், காப்பீடு தொகை இன்னும் வழங்கப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக காப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கோரி விவசாயிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இன்னும் 15 நாட்களில் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்