சேலத்தில் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்

சேலத்தில் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-17 22:15 GMT
சேலம், 

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட கருங்கல்பட்டி, செல்லக்குட்டிக்காடு, ஜவகர்லால் நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாக்கடை கால்வாய் கட்டப்பட்டது. இந்த பணியின் போது சாலை பழுதடைந்தது.

இதனால் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனிடையே சேலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் மழைநீருடன் சாக்கடை கழிவுநீரும் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்துவிடுவதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சாலையை சீரமைக்காததால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று கருங்கல்பட்டி காய்கறி மார்க்கெட் அருகே திடீரெனமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அன்னதானப்பட்டி போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர்கள் இந்த சாலையை சீரமைக்கவும் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு அவர்களிடம் விரைவில் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்