மைக்செட் உரிமையாளரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை - சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பு

மைக்செட் உரிமையாளரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2019-09-17 22:30 GMT
சிவகங்கை,

தேவகோட்டை கருதாவூருணி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 20). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து சொந்தமாக ரேடியோ மைக்செட் போடும் தொழில் செய்து வந்தார். கடந்த 2010-ம் வருடம் ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி இரவு, இவர் நடராஜபுரம் பகுதியில் மைக்செட் போட்டு கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் (49), முருகேசன் (41), கோவிந்தராஜன் (40) ஆகியோர் மைக்செட் போட்ட இடத்திற்கு வந்து தகராறில் ஈடுபட்டனர்.

இதைப்பார்த்த கார்த்திக் அவர்களை தட்டிக்கேட்டார். அதில் ஆத்திரமடைந்த 3 பேரும், கார்த்திக்கை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தினர். அதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீசார் 3 பேரையும் கைது செய்து, அவர்கள் மீது சிவகங்கையில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்த போது, கோவிந்தராஜன் இறந்துவிட்டதால், அவர் மீது இருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி கார்த்திகேயன் குற்றம் சாட்டப்பட்ட ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

தொடர்ந்து முருகேசனை நீதிபதி விடுதலை செய்தார். இந்த வழக்கில் தண்டனை பெற்ற ஜெயராமன் தற்போது வேறொரு கொலை வழக்கில் கைதாகி குண்டர் தடுப்பு சட்டத்தில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்