குடிநீர் வசதி செய்து தரக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

குடிநீர் வசதி செய்து தரக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2019-09-17 22:15 GMT
சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி லதா தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோருதல், வங்கிக் கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், இலவச தையல் எந்திரம் வழங்கக் கேட்டல், ஆக்கிரமிப்பு அகற்ற கேட்டல், பட்டா ரத்து தொடர்பான மேல்முறையீடு, மின் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

பின்னர் அந்த மனுக்கள் மீது விரைவில் விசாரணை நடத்தி ஒருமாத காலத்திற்குள் உரிய தீர்வு வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். கூட்டத்தில் காளையார் கோவில் தாலுகா சிறியூர் கிராம மக்கள் சார்பில் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது, சிறியூர் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த கிராமத்திற்கு பல ஆண்டுகளாக காவிரி கூட்டுக்குடிநீர் வந்து கொண்டிருந்தது. தற்போது கடந்த 2 மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக அவதிபட்டு வருகின்றனர். எனவே உடனடியாக காவிரி கூட்டுக்குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோல இங்குள்ள தண்ணீர் தொட்டி மற்றும் குளியல் தொட்டி ஆகியவை பழுதடைந்துள்ளது. எனவே அவைகளையும் சரி செய்து தர வேண்டும்.

அத்துடன் சிறியூர் மற்றும் சுற்றுப்புற கிராமத்தில் உள்ள மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வர வசதியாக பஸ் வசதி செய்துதர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்