பாலம் கட்டும் பணி: காளவாசல் பகுதியில் மரங்களை தோண்டி வேறு இடத்தில் நடுவது சாத்தியமா? கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆய்வு நடத்த ஐகோர்ட்டு உத்தரவு

பாலம் கட்டும் பணிக்காக காளவாசல் பகுதியில் உள்ள மரங்களை தோண்டி வேறு இடத்தில் நடுவது சாத்தியமா? என்று கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆய்வு நடத்த, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-09-17 23:04 GMT
மதுரை,

மதுரை செல்லூரைச் சேர்ந்த குபேந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது-

மதுரை பழங்காநத்தம்-பாத்திமா கல்லூரி பை-பாஸ் ரோட்டில் காளவாசல் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உயர்மட்ட பாலம்கட்டப்பட்டு வருகிறது. இதற்காக பழங்காநத்தம்-பாத்திமா கல்லூரி இடையிலான சாலை அகலப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த சாலையோரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையான மரங்கள் ஏராளமான உள்ளன. அரசமரம், வேப்பமரம், இயல்வாகை மரம், தூங்குமூஞ்சி மரம், புங்கை உள்பட பல வகையான நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை, சாலை அகலப்படுத்துவதற்காக வெட்டுகின்றனர்.

மரங்களை வெட்டாமல் பாலம் அமைக்க கோரிக்கை வைத்தும் எந்த பலனும் இல்லை. மரங்களை வேரோடு எடுத்து வேறு இடத்தில் நடும் நவீன எந்திரங்களை பயன்படுத்த உத்தரவிட வேண்டும். இதுபோன்ற பணிகளின்போது மரங்களையும் அவற்றில் இருக்கும் பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களையும் கணக்கிட்டு மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கவும், அது தொடர்பான விதிகளை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், இவ்வாறு வெட்டப்படும் மரங்களுக்கு பதில் புதிய மரங்களை நட்டு பராமரிக்க உத்தரவிட வேண்டும்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “இந்த சாலை பணிக்காக பல மரங்கள் ஏற்கனவே வெட்டப்பட்டுவிட்டன“ என்றார்.இதையடுத்து நீதிபதிகள், பிற மாநிலங்களைப் போல மரங்களை பாதுகாக்கும் சட்டத்தை முறையாக அமல்படுத்துவதில் தமிழக அரசு ஏன் தீவிரம் காட்டுவதில்லை? என கூறி கேள்வி எழுப்பினர். மேலும், காளவாசல் பகுதியில் மீதமுள்ள மரங்களை வேரோடு எடுத்து வேறு இடத்தில் நட இயலுமா? என்பது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கை வருகிற 30-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்