அரியலூரில் போலீஸ் காவலில் இருந்த விசாரணை கைதி சாவு; டி.ஐ.ஜி. விசாரணை

அரியலூரில் போலீஸ் காவலில் இருந்த விசாரணை கைதி உயிரிழந்தார். அவரை அடித்துக்கொன்றதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிரு‌‌ஷ்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2019-09-18 22:15 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கஞ்சமலைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி என்ற குண்டுமணி (வயது 53). இவர் மீது ஆண்டிமடம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் போலீஸ் பிடியில் சிக்காமல் குண்டுமணி தலைமறைவாகி இருந்தார்.

இதையடுத்து அவரை பிடிக்க அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனிப்படை போலீசார் தலைமறைவாகியிருந்த குண்டுமணியை கைது செய்து அரியலூர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் வைத்து, விசாரணை நடத்தி வந்த னர்.

அடித்து கொலையா?

நேற்று முன்தினம் போலீசார் விசாரணையின் போது குண்டுமணிக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், இதையடுத்து அவரை போலீசார் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் குண்டுமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து குண்டுமணி உடல் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையின் பிரேத கூடத்தில் வைக்கப்பட்டது. போலீஸ் காவலில் இருந்த குண்டுமணியை போலீசார் அடித்து துன்புறுத்தியதில், அவர் இறந்திருக்கலாம் என்று, அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து நேற்று காலை அரியலூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு சந்திரசேகர் முன்னிலையில் குண்டுமணியின் உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்து, அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அப்போது மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் குண்டுமணி எப்படி உயிரிழந்தார் என்பது, அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே தெரியவரும். இது தொடர்பாக அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டி.ஐ.ஜி. விசாரணை

இந்த நிலையில் திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிரு‌‌ஷ்ணன் அரியலூருக்கு வந்து இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் தனிப்படை போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.

போலீஸ் காவலில் இருந்த விசாரணை கைதி உயரிழந்த சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்