மின்வாரிய அலுவலகத்தை தமிழக ஏரி- ஆற்றுப்பாசன சங்கத்தினர் முற்றுகை

இலவச மின் இணைப்பை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை தமிழக ஏரி- ஆற்றுப்பாசன சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-18 22:45 GMT
புதுக்கோட்டை,

தமிழகத்தில் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு அரசு இலவச மும்முனை மின்சாரத்தை வழங்கி வருகிறது. இதற்காக கடந்த 20 ஆண்டுகளாக 5 லட்சத்து 60 ஆயிரம் விவசாயிகள் இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். மேலும் தக்கல் முறையில் 3 ஆயிரம் விவசாயிகள் இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். இதுநாள் வரை மின்சார வாரியம் இலவச மின் இணைப்பை வழங்காமல் காலதாமதம் படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நிலத்தடி நீரை நம்பியே விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். நிலத்தடி நீரை எடுப்பதற்கு இலவச மின்சாரம் கட்டாயம் விவசாயிகளுக்கு தேவை. எனவே உடனடியாக தமிழக அரசு விண்ணப்பித்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின் இணைப்பை உடனடியாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை தமிழக ஏரி- ஆற்றுப்பாசன சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கொத்தமங்கலம் சிவசாமி சேர்வை முன்னிலை வகித்தார். புதுக்கோட்டை மாவட்ட தலைவர் நெய்வத்தளி கண்ணப்பன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசு உடனடியாக இலவச மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதில் அறந்தாங்கி ஒன்றிய அமைப்பாளர் வீரக்குமார், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சுப்பிரமணியன், விராலிமலை ஒன்றியஅமைப்பாளர் ராஜா உள்பட விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்