நில உரிமையை பாதுகாக்கக்கோரி சட்டநகலை எரிக்க முயன்ற விவசாயிகள் 23 பேர் கைது

நில உரிமையை பாதுகாக்கக்கோரி கரூரில் சட்ட நகலை எரிக்க முயன்ற விவசாயிகள் 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-18 23:00 GMT
கரூர்,

கரூர் மாவட்ட உயர்மின்கோபுரங்களுக்கு எதிராக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று விவசாயிகள் உள்ளிட்டோர் திரண்டிருந்தனர். அப்போது விவசாயிகளின் நில உரிமையையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வகையில் 1885-ம் ஆண்டு தந்தி சட்டம் உள்ளது. இதனை பயன்படுத்தி தான் விவசாய நிலங்களில் உயர்மின்கோபுரங்கள் அமைப்பது உள்ளிட்டவற்றை செயல்படுத்துகின்றனர். எனவே அந்த சட்டத்தை கைவிடக்கோரி, அதன் நகலை அங்கிருந்த விவசாயிகள் எரிக்க முயன்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தாந்தோன்றிமலை போலீசார், சட்ட நகலை எரிக்க முயன்ற விவசாயிகள் 23 பேரை கைது செய்தனர்.

உயர்மின் கோபுரம்

இது தொடர்பாக விவசாய சங்க நிர்வாகி பொன்னுசாமி நிருபர்களிடம் கூறுகையில்,கரூர் மாவட்டத்தில் பரமத்தி, தென்னிலை போன்ற இடங்களில் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு விவசாயிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. உயர் மின் கோபுரம் அமைக்கும் இடத்திற்கு செல்லும் இடத்திலும் இழப்பீடு அல்லது வாடகை தீர்மானிக்கக் கூடிய விதிமுறைகளை மாநில அரசு உருவாக்க வேண்டும் என்று மின்சாரத் துறையின் சட்டம் குறிப்பிடுகிறது.

இந்த சட்டப்படி வாடகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் உயர்மின் கோபுரத்திற்கு வாடகை வழங்கப்படவில்லை என்று மின்துறை அமைச்சர் கூறுகிறார். செல்போன் டவருக்கு வாடகை வழங்கும்போது உயர் மின் கோபுரத்திற்கு ஏன் வழங்கக்கூடாது. இந்த சட்டத்தை மாற்ற வேண்டும். இந்திய தந்தி சட்டத்தை கைவிட வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்