திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறையினர், தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறையினர், தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2019-09-18 23:00 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் மகுடபதி தலைமை தாங்கினார். பொருளாளர் சரவணன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் வீரகடம்புகோபு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது குடிமராமத்து, மழைநீர் சேமிப்பு, பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த உரிய காலஅவகாசம் வழங்க வேண்டும். பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வில் இருக்கும் குளறுபடிகளை நீக்க வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களை இயல்பாக பணி செய்ய விடாமல் நெருக்கடிக்கு உள்ளாக்குவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. பின்னர் கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டர் விஜயலட்சுமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா ஆகியோரிடம் மனு கொடுத்தனர்.

தபால் ஊழியர்கள்

திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு, பாரதீய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் கோட்ட செயலாளர் திருமலைசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் பாபுலால், செயலாளர் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், வங்கிகளை போன்று தபால் துறைக்கும் வாரத்தில் 5 நாட்களை மட்டும் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும், தபால் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் தபால் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்