சேறும் சகதியுமான சாலையில், நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டம் - திருக்கோவிலூர் அருகே பரபரப்பு

திருக்கோவிலூர் அருகே சேறும் சகதியுமாக உள்ள சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-18 22:15 GMT
திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ளது கச்சிக்குப்பம் கிராமம். இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் திருக்கோவிலூர் உள்பட பல்வேறு நகர்புறங்களுக்கு செல்ல அங்குள்ள கீழ்த்தாழனூர்-காட்டுப்பையூர் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மாணவர்களும் இந்த சாலை வழியாக திருக்கோவிலூர், காட்டுப்பையூர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரிவர பராமரிக்கவில்லை. இதனால் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியது. சாலையோரம் வடிகால் கால்வாய் வசதி இல்லாததால், மழை காலங்களில் தண்ணீர் சாலையில் தேங்கி சேறும் சகதியாக மாறிவிடும். இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கீழ்த்தாழனூர்-காட்டுப்பையூர் சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும்போதும், நடந்து செல்லும்போது சேற்றில் சிக்கி அடிக்கடி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சேறும் சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை கிராம மக்கள் சேதமடைந்த சாலைக்கு திரண்டு வந்து, சேற்றில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை, அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.

இதுகுறித்து பா.ம.க. முன்னாள் மாவட்ட இளைஞரணி தலைவர் அய்யப்பன் கூறுகையில், சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தோம். இருப்பினும் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாற்று நடும் போராட்டத்தை நடத்தி உள்ளோம். இதையடுத்தும் சாலையை சீரமைக்காவிட்டால் அடுத்த மாதம்(அக்டோபர்) 2-ந்தேதி கச்சிக்குப்பத்தில் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தை நாங்கள் புறக்கணிப்போம் என்றார். 

மேலும் செய்திகள்