சாலைகளில் சுற்றித்திரிந்து வாகன ஓட்டிகள், பொதுமக்களை அச்சுறுத்தும் மாடுகள் - மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர் நகரில் சாலைகளில் சுற்றித்திரிந்து வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்திவரும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-09-18 22:30 GMT
வேலூர், 

வேலூர் நகரில் வாகன போக்குவரத்து நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆற்காடு ரோடு, அண்ணாசாலை, காட்பாடி ரோடு, ஆரணி சாலை என நகரின் அனைத்து சாலைகளும் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இதனால் இந்த பகுதிகளில் எப்போதும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக அண்ணாசாலையின் ஒரு பகுதியில் சாலையை சீரமைப்பதற்காக ஏற்கனவே இருந்த தார்சாலையை கொத்தி எடுத்துவிட்டனர். ஆனால் மாதக்கணக்காகியும் இன்னும் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த சாலையின் ஒருபகுதியை மட்டுமே வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இதன்காரணமாக அண்ணாசாலையில் எப்போதும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

வாகனங்களின் பெருக்கத்தால் வேலூர் சாலைகள் காலை முதல் இரவு வரை எப்போதும் பரபரப்பாகவே காணப்படுகிறது. இந்த பரபரப்புக்கு இடையே வாகனங்களுடன் கால்நடைகளும் சாலைகளை ஆக்கிரமித்து வருகின்றன. வேலூர் நகரின் முக்கிய சாலைகளில் தற்போது மாடுகள் சர்வ சாதாரணமாக சுற்றித்திரிகின்றன.

மாடுகள் வளர்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அதை வீட்டு வளாகத்தில் கட்டி வைப்பது இல்லை. இதனால் மாடுகள் ரோடுகளில் சுற்றித்திரிகின்றன. பால் கறக்கும் நேரத்திற்கு மட்டும் இந்த மாடுகள் தானாக பால் கறக்கக்கூடிய இடத்துக்கு சென்று விடுகின்றன. சில மாடுகளை அதன் உரிமையாளர்கள் பால் கறப்பதற்கு மட்டும் வீடுகளுக்கு ஓட்டிச்சென்று பால் கறந்ததும் அதை கட்டி வைக்காமல் மீண்டும் விரட்டி விடுகிறார்கள்.


இதனால் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவது அதிகரித்து வருகிறது. வாகன போக்குவரத்து நெரிசலால் சிக்கித்தவிக்கும் பொதுமக்கள் தற்போது மாடுகளால் அச்சுறுத்தப்பட்டு வருகிறார்கள். சாலைகளில் நடந்துசெல்லும் பொதுமக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை சிலநேரங்களில் மாடுகள் விரட்டு வதை காணமுடிகிறது.

மாடுகள் விரட்டும்போது பயந்து ஓடும் பெண்கள், சிறுவர்கள் அந்த வழியாக வரும் வாகனங்களில் சிக்கி விபத்துகள் ஏற்படும் நிலை உருவாகிறது. இருசக்கர வாகனங்களில் வருபவர்களும், மாடுகளால் கீழே விழக்கூடிய நிலை ஏற்படுகிறது. சில இடங்களில் ரோட்டிலேயே மாடுகள் கும்பலாக படுத்திருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சாலைகளில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை மாநகராட்சி நிர்வாகம் பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பார்கள். வேலூர் மாநகராட்சியில் தற்போது சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சாலைகளில் சுற்றித்திரிந்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதோடு பொதுமக்களை அச்சுறுத்திவரும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்