விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்துக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் - கலெக்டர் சிவஞானம் உத்தரவு

விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்திற்கு கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலை பாதுகாப்புக்குழு கூட்டத்தின் போது கலெக்டர் சிவஞானம் கூறினார்.

Update: 2019-09-19 22:45 GMT
விருதுநகர், 

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்புக்குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார், போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், சாலை பாதுகாப்புக்குழு உறுப்பினர் அழகு சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்துக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று பலமுறை கலெக்டர் அறிவுறுத்தியும், போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை என சாலை பாதுகாப்புக்குழு உறுப்பினர் அழகுசுந்தரம் புகார் கூறினார். பஸ்கள் ரெயில் நிலையத்துக்கு இயக்கப்படுவதாகவும், ரெயில்கள் குறித்த நேரத்துக்கு வராததால் பஸ்களை ரெயில் நிலையத்திலேயே நிறுத்தி வைப்பதில் சிரமம் ஏற்படுவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து கலெக்டர் சிவஞானம், விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்திற்கு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பொதுமக்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பஸ்கள் இயக்கப்படுவது குறித்து உறுதி செய்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

சாத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்துக்கு செல்லும் பாதையில் 2 பள்ளிகள் உள்ள நிலையில் அந்த சாலை மிகவும் மோசமாக இருப்பதால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கும், வாகன போக்குவரத்துக்கும் பெரும் சிரமம் ஏற்படுவதால் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நகராட்சி அதிகாரிகள் சாலை சீரமைப்புக்கான நிதி வசதி இல்லை என தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து கலெக்டர் சிவஞானம் சாலை சீரமைப்புக்கு மதிப்பீடு தயாரிக்குமாறும், இதற்கான நிதியினை மாவட்ட நிர்வாகத்தின் விருப்ப நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்