ஓடும் ரெயிலில் பயணிகளிடம் நகை, பணம் திருடியவர் கைது

ஓடும் ரெயிலில் பயணிகளிடம் நகை, பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 11½ பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-09-19 22:15 GMT
ஜோலார்பேட்டை,

காட்பாடி மற்றும் குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஓடும் ரெயிலில் பயணிகளிடம் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடிப்பதாக ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனுக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க அவரது உத்தரவின்பேரில், சேலம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு மேற்பார்வையில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் எழில்வேந்தன், ஏட்டு சுப்பிரமணி மற்றும் போலீஸ்காரர்கள் மதன், சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 4-வது பிளாட்பாரத்தில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், அந்த நபர் குடியாத்தம் அருகே உள்ள வேப்பூர் ஊராட்சி முல்லை நகர் காலனியை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரின் மகன் வசந்தகுமார் (வயது 38) என்பதும், ரெயில் பயணிகளிடம் நகை, பணம் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

வசந்தகுமார் சிக்னலுக்காக நின்று கொண்டிருக்கும் ரெயிலில் ஏறி முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிக்கு சென்று தூங்கிக்கொண்டிருந்த பயணிகளின் நகைகளை திருடி உள்ளார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாதவி (40), பிந்து (35), தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த லட்சுமி (32), கோவையை சேர்ந்த விஜயா (53), பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண் ஆகியோரிடம் வெவ்வேறு நாட்களில் நகைகளை திருடி உள்ளார். அவரிடம் இருந்து 11½ பவுன் நகைகளை பறிமுதல் செய்துள்ளோம். அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்