சினிமா தயாரிப்பாளருக்கு ஜாமீன் பெற ராமநாதபுரம் கோர்ட்டில் போலிச்சான்று கொடுத்த 2 பேர் கைது

சிறையில் உள்ள சினிமா தயாரிப்பாளருக்கு ஜாமீன் கேட்டு ராமநாதபுரம் கோர்ட்டில் போலிச்சான்று கொடுத்த 2 பேர், நீதிபதியின் நடவடிக்கையால் சிக்கினார்கள்.

Update: 2019-09-19 22:45 GMT
ராமநாதபுரம், 

மோசடி மற்றும் தகவல் தொழில்நுட்ப குற்றங்கள் தொடர்பான புகாரில் வேலூரை சேர்ந்த சினிமா தயாரிப்பாளரான சரவணக் குமாரை (வயது 29) ராமநாதபுரம் போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர். அவர் தற்போது சிறையில் உள்ளார்.

அவர் தனக்கு ஜாமீன் கோரி ராமநாதபுரம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதன்படி நீதித்துறை நடுவர் கோர்ட்டு எண் 2-ல் இரு நபர் ஜாமீன் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதற்காக வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 3-வது தெருவை சேர்ந்த கோவிந்தன்(57), வேலூர் அன்பூட்டி கிராமம் காக்கமாபட்டி தெருவை சேர்ந்த ராமலிங்கம்(51) ஆகியோர் வீட்டு வரி ரசீது, ஆதார் கார்டு உள்ளிட்டவற்றுடன் வேலூர் தாசில்தார் வழங்கியதாக சான்றிதழையும் சமர்ப்பித்து ஜாமீன் உத்தரவாதம் அளித்தனர்.

இந்த ஆவணங்களை சரிபார்த்த நீதிபதிக்கு, சான்றிதழ் மேல் சந்தேகம் ஏற்பட்டது. எனவே அதன் உண்மை தன்மையை பரிசோதிக்க உத்தரவிட்டு, நடவடிக்கை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து வேலூர் தாலுகா அலுவலகத்தில் தொடர்பு கொண்டு அதிகாரிகள் விசாரித்த போது, அதுபோன்று சான்றிதழ் எதுவும் தாங்கள் வழங்கவில்லை என்று தாலுகா அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழை படம் எடுத்து ‘வாட்ஸ்-அப்’ மூலம் அனுப்பியும் விசாரிக்கப்பட்டது. அதன் பின்னர் அது போலிச் சான்றிதழ் என உறுதி செய்யப்பட்டது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கோர்ட்டின் தலைமை எழுத்தர் நடராஜன், ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, வழக்குபதிவு செய்தனர். போலிச்சான்றிதழை கோர்ட்டில் சமர்ப்பித்தது தொடர்பாக கோவிந்தன், ராமலிங்கம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக வினோத் உள்ளிட்ட 2 பேரை வலைவீசி போலீசார் தேடிவருகின்றனர்.

ராமநாதபுரத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியை சேர்ந்த கணவன்- மனைவி, இதுபோன்று ஜாமீன் வழக்கில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்தது தொடர்பாக கைதானது குறிப்பிடத்தக்கது. தற்போது வேலூரை சேர்ந்த 2 பேர் கைதாகி உள்ளனர்.

வேறு மாவட்டத்தினை சேர்ந்தவர்களுக்கு ஜாமீன் வழங்கும் போது சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடம் சான்று பெற்று வரவேண்டும் என்பது விதியாகும். அவ்வாறு பெற்று சமர்ப்பிக்கப்படும் சான்றுகளை வேறு மாவட்டம் என்பதால் கோர்ட்டில் சரிபார்க்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில் சிலர், சாதாரணமாக போலி சான்றிதழ் தயாரித்து ஜாமீன் வழக்குகளுக்கு கொடுத்து வந்தது இதன்மூலம் தெரியவந்துள்ளது.

இந்த சான்றிதழ்களை தயாரித்து கொடுத்தவர்களை பிடிக்க போலீசார் துரித நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த நபர்கள் சிக்கினால் இதுவரை யார்-யாருக்கு எந்தெந்த கோர்ட்டுகளில் போலி சான்றிதழ் கொடுத்துள்ளனர் என்பது தெரியவரும். ஜாமீன் பெற கோர்ட்டுகளில் போலி சான்றிதழ் கொடுத்த விவகாரம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்