நடனக்குழுவினரிடம் நகை பறித்த பிரபல ரவுடி டிராக் சிவா கைது

நடனக்குழுவினரிடம் நகை பறித்துச் சென்ற பிரபல ரவுடி டிராக் சிவாவை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-19 22:45 GMT
மூலக்குளம்,

சென்னை தாம்பரம் சானிட்டோரியம் பகுதியை சேர்ந்தவர் தில்லை ஆனந்த். நடனக்குழு நடத்தி வரும் இவர் தனது மனைவி தபசும் சல்மா மற்றும் தோழி திவ்யா, தினேஷ் ஆகியோருடன் புதுவையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்தார்.

பச்சை குத்திக்கொள்ள விரும்பியதால் திவ்யாவை மூலக்குளம் திருமலைவாசன் நகரில் உள்ள ஒரு இடத்துக்கு தில்லை ஆனந்த், தபசும் சல்மா ஆகியோர் அழைத்துச் சென்றனர். அங்கு பச்சை குத்திக் கொண்டிருந்த போது 2 வாலிபர்கள் வந்தனர்.

திடீரென 3 பேரையும் அந்த வாலிபர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். தபசும் சல்மாவிடம் இருந்து சுமார் 9 கிராம் எடையுள்ள தங்க நகையை பறித்துச்சென்றனர்.

இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டது பிரபல ரவுடி டிராக் சிவா மற்றும் அவரது நண்பரான நேதாஜி நகரை சேர்ந்த ஜிம் விக்கி என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து டிராக் சிவாவை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து நகை மீட்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளியை விரைவாக கைது செய்த போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் பாராட்டினார்.

டிராக் சிவா மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்