கோவில் கட்டுவதில் இருதரப்பினரிடையே தகராறு: அரசு சார்பில் மாரியம்மன் சிலை பிரதிஷ்டை - பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

வேப்பூர் அருகே கோவில் கட்டுவதில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அரசு சார்பில் சிலை வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-09-20 22:30 GMT
வேப்பூர்,

வேப்பூர் அருகே உள்ள அரியநாச்சி கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சேதமடைந்ததையடுத்து கட்டிடம் இடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு புதிதாக கோவில் கட்ட ஒரு தரப்பினர் முடிவு செய்தனர். ஆனால் இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இருதரப்பினரும், வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து திட்டக்குடி தாசில்தார், விருத்தாசலம் சப்- கலெக்டர் ஆகியோர் தனித்தனியாக சமாதான கூட்டம் நடத்தினர். இருப்பினும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இருதரப்பினர் சார்பிலும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஒரு தரப்பினர், பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை அழைத்து வந்து அந்த கோவிலில் சாமி சிலையை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2 வாரத்துக்கு முன்பு எச்.ராஜா அங்கு வந்தார்.

ஆனால் மற்றொரு தரப்பினர், எச்.ராஜாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரசாந்த் தலைமையில் மீண்டும் சமாதான கூட்டம் நடத்தப்பட்டது. இதிலும் இருதரப்பினருக்கும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து அரசு சார்பில் கோவில் கட்டப்படும் என்றும், தனிநபர்கள் யாரும் கோவில் கட்ட அனுமதி இல்லை என்றும், தாசில்தார் தலைமையில் கோவில் கட்டுவது, தாசில்தார் பெயரில் தனி வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, அந்த கணக்கில் கிராம மக்கள் நன்கொடை வழங்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேல் தலைமையில் திட்டக்குடி இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் வருவாய்த்துறையினர் அரியநாச்சி கிராமத்துக்கு நேற்று சென்றனர். பின்னர் அங்கு அரசு செலவில் புதிதாக பீடம் அமைத்து இருதரப்பை சேர்ந்தவர்கள் முன்னிலையில் மாரியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதற்கிடையே பீடம் கட்டிக்கொண்டிருந்த போது, கோவில் கட்டுவதாக தெரிவித்த ஒரு தரப்பை சேர்ந்த பொதுமக்கள் திடீரென திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரசு சார்பில் கோவிலில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

அப்போது அங்கிருந்த பெண் ஒருவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்எண்ணெயை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைபார்த்த அங்கிருந்த போலீசார், அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி அவரை எச்சரித்து அனுப்பினர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் அங்கு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்